[X] Close

'எனக்கு பினாமி சொத்து இருக்கிறது என நிரூபிக்க முடியுமா?'- எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி சவால்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 16:28 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

எந்த வெளிநாட்டு வங்கியிலாவது நான் பணத்தை டெபாசிட் செய்திருக்கிறேன், அல்லது, பினாமி பெயரில் சொத்துக்களை நான் குவித்து வைத்திருக்கிறேன் என்று எதிர்க்கட்சிகள் நிரூபிக்க முடியுமா என்று பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 7-வது கட்டத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். பாலியா நகரில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மகாகலப்படக் கூட்டணிக்கு நான் வெளிப்படையாக ஒரு சவால் விடுக்கிறேன், உங்களுக்கு துணிச்சல் இருந்தால், என் மீது அவதூறுகளை வீசுவதற்கு பதிலாக, என்னுடைய சவாலை ஏற்க வேண்டும்.

எனக்கு எங்காவது பினாமி சொத்துக்கள் இருப்பதாகவோ, அல்லது பண்ணை வீடு இருப்பதாகவோ, வணிக வளாகம் இருப்பதாகவோ, வெளிநாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்திருப்பதாகவோ, சொத்துக்கள் வாங்கியதாகவோ, கோடிக்கணக்கான மதிப்பில் வாகனம் ஏதும் வைத்திருக்கிறேன் என்று மகாகலப்படக் கூட்டணியால் நிரூபிக்க முடியுமா? இது என்னுடைய சவால்.

நான் ஒருபோதும் பணக்காரராக  மாற கனவு கண்டதில்லை, ஏழைகளின் பணத்தை கொள்ளையடிக்கும் பாவத்தை செய்யவில்லை. என்னுடைய முதல் முன்னுரிமை  ஏழை மக்களின் நலன்தான், தேசத்தை மதிப்பதிலும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும்தான்.

இந்த காரணத்தால்தான் அகங்காரம் கொண்ட பாகிஸ்தானும், தீவிரவாதிகளும் காணாமல் போகிறார்கள். தீவிரவாதிகள் பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்று, இப்போது ஒளிந்துகொண்டு மோடியை நீக்கச் சொல்லி பிரார்த்திக்கிறார்கள். என்னுடைய நடவடிக்கையில் அச்சப்பட்டு சில நேரம் வானத்தையும், வனத்தையும், கடலையும் கூர்ந்து பார்க்கிறார்கள்.

தீவிரவாதிகளுக்கு நிம்மதி இழந்து, தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள். நம்முடைய ராணுவத்தினருக்கு முழுச்சுதந்திரம் அளித்துவிட்டேன். முதலில் துல்லியத்தாக்குதல், 2-வதாக பாலகோட் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். எல்லை தாண்டிவரும் தீவிரவாதத்துக்கு எதிராக நாம் இப்போது போராடி வருகிறோம்.

உள்ளூரில் உள்ள குண்டர்களுக்கு கடிவாளம் போட்டு அடக்கிவைக்க முடியாத மகாகலப்படக் கூட்டணியும், காங்கிரஸும், ஆட்சிக்கு வந்தால் எவ்வாறு தீவிரவாதத்தை ஒழிப்பார்கள். இந்த உலகமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு, அதை எதிர்த்து போராடி வருகிறது. தீவிரவாதத்தை எதிர்க்க டெல்லியில்அமையும் அரசு வலிமையாக இருத்தல் அவசியம்.

மற்றவர்களை திருப்திபடுத்துதல், வாக்குவங்கி அரசியல் இல்லாமல் துணிச்சலுடன் முடிவுகளை எடுக்க வேண்டும்.பொறுத்திருந்து பாருங்கள், தேர்தல் முடிந்தவுடன் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதியும் மீண்டும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வார்கள். என்மீது அவதூறு பரப்பும் மகாகலப்படக் கூட்டணிக்கு மக்கள் வாக்குகள் மூலம் பதிலடி கொடுப்பார்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் சாதி அரசியலில் ஈடுபட்டு, பணத்தை சேர்த்துக்கொண்டு, மாளிகைகளையும், அரண்மனைகளையும் கட்டுகிறார்கள்.

நான் பலதேர்தல்களை சந்தித்துவிட்டேன். ஆனால் ஒருபோதும் சாதி குறித்து பேசியது இல்லை. நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில்கூட பிறந்திருக்கலாம் ஆனால் எனது நோக்கம் தேசத்தை உலகில் முன்னணி நாடாக உயர்த்துவதாகும்.

 இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close