[X] Close

அரசியல் சுயநலத்துக்காக மனைவியை கைவிட்டவர் மோடி: மாயாவதி சர்ச்சை பேச்சு; பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு


  • kamadenu
  • Posted: 14 May, 2019 08:01 am
  • அ+ அ-

‘‘அரசியல் சுயநலத்துக்காக மனைவியை கைவிட்டவர் பிரதமர் நரேந்திர மோடி’’ என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆறு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 7-வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மற்றும் தியோரியாவில் நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில், தலித் மகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் ஆதரவில்தான் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு பதவியில் உள்ளது. உண்மையிலேயே தலித் மக்கள் நலனில் மாயாவதிக்கு அக்கறை இருந்தால், அவர் காங்கிரஸ் அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறாதது ஏன்? மாயாவதி வெற்று அறிக்கைகளை வெளியிட்டு முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டாம்’’ என்று கூறினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மாயாவதி நேற்று கூறியதாவது:ஆல்வார் பலாத்கார சம்பவத்தில் பிரதமர் மோடிதான் அமைதி காக்கிறார். ஆல்வார் பலாத்கார சம்பவத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறார் மோடி.

திருமணம் செய்த மனைவியை, தனது அரசியல் சுயநலத்துக்காக கைவிட்டவர் மோடி. பெண்களை மதிப்பார் என்று அவரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்.

பாஜக.வில் உள்ள திருமணமான பெண்கள், தங்கள் கணவன்மார்களை மோடியிடம் அழைத்து செல்லவே அஞ்சுவதாக எனக்கு தெரிய வந்தது. ஏனெனில், தனது மனைவியை கைவிட்டது போல் எங்கே தங்களது கணவன்மார்களையும் பிரித்து விடுவாரோ என்று பாஜக.வில் உள்ள பெண்கள் அஞ்சுகின்றனர். எனவே இதுபோன்ற மனிதருக்கு பெண்கள் யாரும் வாக்களிக்க கூடாது. இவ்வாறு மாயாவதி பேசினார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி: பிரதமர் மோடியைத் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதன் மூலம், பொது வாழ்க்கைக்கு மாயாவதி தகுதி இல்லாதவர் என்பது வெளிப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களைத்தான் எதிர்க்கட்சிகள் இந்த நாட்டுக்குத் தரமுடியும்.

மாயாவதியின் நிர்வாகம், நெறிமுறை, பேச்சுகள் எப்போதுமே தரம்தாழ்ந்த அளவில் உள்ளன.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்: பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அவதூறாகப் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாஜக மகளிர் குறித்தும் அவர் அவதூறாகப் பேசியுள்ளார். பாஜகவில் உள்ள பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தனது கருத்துக்காக மாயாவதி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மா: மாயாவதி அரசியல் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தோல்வி பயத்தால் தன்னிலையை மறந்து மாயாவதி பேசுகிறார். இதுபோன்ற அறிகுறிகள் எல்லாம்,அவருடைய பேச்சில் தெளிவாக தெரிகின்றன. வரப்போகிற நாட்களில் இன்னும் வாய்க்கு வந்தபடி பேசுவார். எனவே, பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதிக்கு, அரசியல் ‘டானிக்’ தேவைப்படுகிறது.

இவ்வாறு பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close