[X] Close

பிஹாரின் சிவாண் தொகுதியில் போட்டியிடும் கவிதா சிங்: அரசியலுக்கு வந்தவரின் திரைப்படத்தை மிஞ்சும் கதை


  • kamadenu
  • Posted: 14 May, 2019 07:57 am
  • அ+ அ-

-ஆர்.ஷபிமுன்னா

பிஹாரின் சிவாண் தொகுதியின் தேர்தல் போட்டி, பிஹார்வாசிகளால் திரைப்படக் கதைபோல ரசிக்கப்படுகிறது. இதற்கு அங்கு ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) சார்பில் போட்டியிடும் கவிதாசிங் (33) துவக்கிய அரசியல் வாழ்க்கை காரணமாக உள்ளது.

பிஹாரின் கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலில் இடம்பெற்றவர் அஜய்குமார் சிங். இவரது தாயான ஜெக்மாதா தேவி சிவாண் மாவட்டம் தவுரந்தா சட்டப்பேரவை தொகுதியின் எல்எல்ஏவாக இருந்தவர். ஜெக்மாதா, பிஹாரில் பாஜக ஆதரவுடன் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியூ) முதல்வரான நிதிஷ்குமாரின் கட்சியை சார்ந்திருந்தார். கடந்த 2011-ல் திடீர் எனக் காலமானதால், அவரது ஒரே மகனான அஜய்குமார் சிங் தன் தாயின் தொகுதியில் போட்டியிட நிதிஷ்குமாரை அணுகினார்.

அஜய்குமார் சிங் மீது சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருந்தமையால் அவருக்கு போட்டியிடும் வாய்ப்பளிக்க நிதிஷ் மறுத்து விட்டார்.

இதன் காரணமாக, அஜய்சிங் அப்போது ‘மணமகள் தேவை’ என பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டிருந்தார். அதன் நிபந்தனைகள் திரைப்படக் கதைகளை போல் வித்தியாசமாக இருந்தன. மணப்பெண் திருமணம் முடிந்ததும் உடனடியாகத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருக்க வேண்டும் எனவும், இதற்கு ஏதுவாக அவரது குடும்பம் அரசியல் பின்னணி கொண்டதாக இருப்பது அவசியம் என்றும் கூறப்பட்டது. தன் மீது இருந்த வழக்குகள் பற்றியும் குறிப்பிட்டு அஜய் அளித்த விளம்பரம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதற்கு விண்ணப்பித்த 16 மணமகள்களில் ஒருவராக பிஹாரின் ஜே.பி பல்கலைகழகத்தின் பி.ஏ மூன்றாம் ஆண்டு மாணவியான கவிதாசிங்கும் இருந்தார்.

இதில் கவிதாவை தேர்ந்தெடுத்த அஜய்சிங் மணமான கையோடு நிதிஷிடம் அவரை அழைத்து சென்றார். நிதிஷும் தான் கூறியபடி கவிதாவிற்கு அவரது மாமியார் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் அளித்தார். இதில் வெற்றியும் பெற்ற கவிதாசிங், 2011-ல் பிஹார் சட்டப்பேரவையின் இளம் எம்எல்ஏவாகவும் இருந்தார். பிறகு இரண்டாம் முறை தேர்தலில் அஜய்சிங் மீது மேலும் பல வழக்குகள் பதிவானதே தவிர குறையவில்லை. இதன் காரணமாக, கவிதாவிற்கே 2015-ல் மீண்டும் அங்கு போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டு அவர் ஜேடியூவின் எம்ஏல்ஏவாக ஆனார்.

தற்போது அப்பகுதிவாசிகளின் செல்வாக்கும் பெற்று விட்டதால் கவிதாவிற்கு மக்களவை தேர்தலிலும் போட்டியிடும் வாய்ப்பை நிதிஷ் அளித்துள்ளார். இவ்வாறு, திரைப்படங்களின் கதைகளை மிஞ்சும் கவிதாவின் அரசியல் வாழ்க்கையை போல் தேர்தல் போட்டியும் அமைந்தது. சிவாண் தொகுதியில் கவிதா, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளரான ஹென்னா சாஹேபை எதிர்த்து போட்டியிடுகிறார். ஹென்னா, ஒரு பெண் என்பதுடன் கவிதாவை போலவே இவரும் ஒரு கிரிமினல் அரசியல்வாதியின் மனைவி.

ஹென்னாவின் கணவரான முகம்மது சகாபுதீனும் பல கிரிமினல் வழக்குகளில் சிக்கி உள்ளார். சிவாண் தொகுதியின் நான்கு முறை எம்பியான சகாபுதீன் 2007-ல் ஒரு கொலை வழக்கில் திஹார் சிறையில் உள்ளார். இவருக்கு அஜய்சிங் மீதும் பல்வேறு விவகாரங்களில் விரோதம் நிலவுகிறது. இவர்களது மனைவிமார்களின் போட்டி முடிவை பிஹார்வாசிகள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close