[X] Close

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ‘நடந்தது நடந்துவிட்டது’ என்று கூறும் காங்கிரசுக்கு ‘போதும் போதும்’ என நாட்டு மக்கள் பதில்: மத்திய பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 07:00 am
  • அ+ அ-

வன்முறை, ஊழல்களை ‘நடந்தது நடந்துவிட்டது’ என்று கூறும் பொறுப்பில்லாத காங்கிரசைப் பார்த்து ‘போதும் போதும்’ என்று நாட்டு மக்கள் பதிலளிக்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லம் என்ற இடத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:காங்கிரஸ் ஆட்சியின்போது மத்தியப் பிரதேசத்தில் போபால் விஷவாயுக் கசிவு சம்பவம் நடந்தது. காமன்வெல்த் போட்டி ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் போன்றவை நடந்தன. ஆனால், இதற்கொல்லாம் காங்கிரசின் பதில் ‘நடந்தது நடந்துவிட்டது’ என்பதுதான். இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் (சாம்பிட்ரோடா) ‘நடந்தது நடந்துவிட்டது. அதற்கு இப்போது என்ன?’ என்று பொறுப்பில்லாமல் பேசுகிறார்.

கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் விராட் போர்க் கப்பலை பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல பயன்படுத்தினார். இதைச் சொன்னால் இதற்கும் காங்கிரசின் பதில், ‘நடந்தது நடந்துவிட்டது’. தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்கள் தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர் என்றால் காங்கிரசின் எதிர்வினை ‘நடந்தது நடந்துவிட்டது’. இதுதான் காங்கிரசின் ஆணவ குணம். இந்த ஆணவப் போக்கினால்தான் காங்கிரஸ் ஆட்சியின்போது ஏழைகளுக்கு வீடுகள், மின்சாரம், சமையல் காஸ் ஆகியவை கிடைக்கவில்லை. வன்முறை, தீவிரவாதம், ஊழல்கள் எல்லாவற்றையும் ‘நடந்தது நடந்துவிட்டது’ என்று பொறுப்பில்லாமல் கூறும் காங்கிரசைப் பார்த்து ‘போதும் போதும், இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது’ என்று நாட்டு மக்கள் பதிலளிக்கின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுகிறது. மக்களும் கடவுளும் ஒன்றுதான். மக்களை ஏமாற்றுவதன் மூலம் கடவுளையே காங்கிரஸ் ஏமாற்றுகிறது. 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாயிகள் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று உறுதியளித்தோம். மக்களவைத் தேர்தலுக்குப் பின், பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தபிறகு 5 ஏக்கர் என்ற நிபந்தனை நீக்கப்பட்டு மேலும், அதிகமான விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பலன் பெறுவார்கள்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close