[X] Close

கமல்ஹாசன் 5 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும்; கட்சியின் பதிவை ரத்து செய்திடுக: தேர்தல் ஆணையத்திடம் பாஜக திடீர் வலியுறுத்தல்


5

  • kamadenu
  • Posted: 13 May, 2019 20:03 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதற்கு 5 நாட்கள் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.

வரும் 19-ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இடைத்தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் , தனது கட்சியின் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், " சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்கு நான் இன்று கேள்வி கேட்க வந்திருக்கிறேன். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டிச் சொல்வேன்" என்றார்.

கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், எச்.ராஜா, அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்னர்.

இந்நிலையில், பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாயா தேர்தல் ஆணையத்திடம் கமல்ஹாசன் பேசிய பேச்சு குறித்து புகார் தெரிவித்துள்ளார். அந்தப் புகாரில், " சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறி கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை கமல்ஹாசன்  புண்படுத்திவிட்டார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக கூடி இருக்கும் இடத்தில் வேண்டுமென்றே கமல்ஹாசன் இவ்வாறு பேசியுள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951 பிரிவு 123ன்கீழ் இது குற்றமாகும். மத உணர்வுகளையும், சாதி உணர்வுகளையும் தூண்டும் வகையில் கமல்ஹாசன் பேசி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். கமல்ஹாசனின் பேச்சு சமூகத்தில் மக்களிடையே இருக்கும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் குலைக்கும் விதமாக இருக்கும். இது ஐபிசி 153ஏ பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

அரசமைப்புச் சட்டம் 324 பிரிவின்படி, கமல்ஹாசன் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும். அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். கமல்ஹாசனின் கட்சியின் பதிவையும் ரத்து செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close