[X] Close

நாட்டின் பாதுகாப்பில் அக்கறை இல்லாதது காங்கிரஸ்: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கடும் தாக்கு


  • kamadenu
  • Posted: 13 May, 2019 07:59 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

நாட்டின் பாதுகாப்பில் அக்கறை இல்லாத கட்சியாக காங்கிரஸ் விளங்குவதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் பாஜக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமித் ஷா பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் கீழ், நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் எங்கு பார்த்தாலும் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவின் இந்த மக்கள் செல்வாக்கை பார்த்து, காங்கிரஸ் பயந்து போய் இருக்கிறது. இதன் காரணமாக, அவர்கள் பாஜக குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் அவதூறு பரப்பி வருகின்றனர். ஆனால், அதனை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

நாட்டு மக்கள் மீதும், நாட்டின் பாதுகாப்பின் மீதும் அக்கறை இல்லாத கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது.

காங்கிரஸின் ஆட்சிக்காலத்தில் நமது ராணுவ வீரர்கள் 5 பேரின் தலைகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொய்தனர். ஆனால், அதற்கு எந்த பதிலடியும் கொடுக்கப்படவில்லை. அதேபோல், மும்பை தாக்குதலுக்கும் அக்கட்சி எதிர்வினை ஆற்றவில்லை.

ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில், பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் இரண்டு மடங்காக பதிலடி கொடுக்கப்படுகிறது. இதுதான் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் உள்ள வித்தியாசம்.

நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால் மட்டுமே நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். அதேபோல், மத்தியில் அடுத்த முறை பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்படும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close