[X] Close

'பாக். ராடாரில் இருந்து இந்திய விமானங்கள் தப்பிக்க மேகங்கள் உதவின': மோடியின் பேச்சும் நெட்டிசன்கள் சரமாரி கிண்டலும்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 18:44 pm
  • அ+ அ-

பாகிஸ்தானின் பாலக்கோட் தாக்குதலின்போது, இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் ராடாரில் இருந்து தப்பித்து வருவதற்கு மேகங்கள் உதவின என்று பிரதமர் மோடி பேசியதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.

காஷ்மீரில் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி முகாம்களை அழித்து திரும்பியதாகக் கூறப்பட்டது.

modi11.PNG 

இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி, தனியார் சேனல் ஒன்றுக்கு நேற்று நேர்காணல் அளித்தார். அதில் பாலகோட் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பேசியதுதான் சமூக வலைதளங்களில் கடும் கிண்டலுக்கும், ஏளனப் பேச்சுக்கும் ஆளாகியுள்ளது.

பிரதமர் மோடியின் பேச்சை, பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் ட்விட்டரில் பகிர்ந்திருந்தது. ஆனால், நெட்டிசன்கள் கிண்டல் செய்து, ராடாரின் அறிவியல், செயல்முறை கூட தெரியாமல் மோடி பேசியதை குறித்து விமர்சித்தவுடன் அதை நீக்கிவிட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் கட்சி, பல்வேறு பத்திரிகையாளர்கள், நெட்டிசன்கள் என மோடியின் 'ராடார் அறிவியல் குறித்து விழிப்புணர்வையும்', அறிவியல் அறிவையும் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர் ட்விட்டரில்.

modi.png 

அந்த நேர்காணலில் பிரதமர் மோடி  பேசுகையில் " திடீரென காலநிலை மோசமாகி, மேகங்கள் கூடத்தொடங்கின, மழையும் பெய்தது. மேகங்களுக்குள் சென்று தாக்குதல் நடத்த முடியுமா என சந்தேகம் இருந்தது. பாலகோட் தாக்குதல் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் ஏராளமான வல்லுநர்களிடம் பேசினோம். காலநிலையை காரணம் காட்டி தாக்குதலை ஒத்திவைக்க கோரினார்கள். தேதியை மாற்றினால் இரு விஷயங்கள் பிரச்சினையாகும் என்று எனக்கு உணர்த்தின. ஒன்று ரகசியம், இரண்டாவது. ஏராளமான மேகக்கூட்டமும் மழையும் பெய்து வருகிறது. அது நமக்கு உதவும் என்று என்னுடைய அறிவுக்கு உணர்த்தியது. பாகிஸ்தான் ராடாரில் இருந்து நமது விமானங்கள் தப்பிக்க மேகக்கூட்டங்கள் இருந்தன. ஆதலால் தாமதிக்காமல் புறப்படுங்கள் என்று கூறினேன் " எனத் தெரிவித்தார்.

ye.PNG 

உண்மையில் ராடார் தொழில்நுட்பம் என்பது ரேடியோ கதிர்வீச்சால் செயல்படக்கூடியது. மேகக்கூட்டங்களால் ரேடியா கதிர்வீச்சை ஒருபோதும் தடுக்க முடியாது. மேகக்கூட்டங்களுக்குள் ஒருவிமானம் புகுந்து, வெளியே வரும்போது ரேடாரால் கண்டுபிடிக்க முடியாது எனும் அறிவியல்பூர்வமற்ற வாதத்தை அறிவியல் அறிஞர்கள் கேட்டு நகைக்கின்றனர். இது சாத்தியமற்ற ஒன்று, அறிவியல் அறிவு இல்லாதவர்கள் பேசும் பேச்சு என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

tt.PNG 

பிரதமர் மோடியின் இந்த பேச்சு குறித்து பாஜக ட்வீட்டுக்கு பதில் அளித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ரீட்வீட்டில் கூறுகையில், " தேசபாதுகாப்பு என்பது இப்படி விளையாட்டுத்தனமாக  பேசுவது அல்ல. இதுபோன்ற பொறுப்பற்றத் தனமான மோடியின் பேச்சு, தேசபாதுகாப்பை பலவீனப்படுத்தும். இதுபோன்று பேசுபவர்கள் இனிமேலும்  பிரதமராக தொடர முடியாது " எனத் தெரிவித்தார்.

twyy.PNG 

மேலும் நெட்டிசன்களும் கிண்டல் செய்து, கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிலர், " நல்லவேளை தானே விமானத்தை ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்தினேன் என்று மோடி கூறவில்லை" என்று கிண்டல் செய்துள்ளனர்.

tttt.PNG 

சிலர், " பிரதமர் சார், எப்படி உங்களால் மட்டும் எப்படி முடியுது" என்றும், " மோடி பேசியதை அழித்துவிட்டால், அவரின் தேசபாதுகாப்பு குறித்த ஆழ்ந்த அறிவு தெரியாமல் போய்விடுமா,. விழித்துக்கொள்ளுங்கள் மக்களே " என்றும் கிண்டல் செய்துள்ளனர். மேலும் ட்விட்டரில் கிளவுட் மோடி, என்டயர் கிளவுட்கவர் போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகி வருகின்றன.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close