[X] Close

'நான் ஏழைகளின் ஜாதி, ஏழ்மைதான் எனது அடையாளம்': பிரதமர் மோடி


  • kamadenu
  • Posted: 12 May, 2019 15:19 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

என் ஜாதி குறித்து பேசும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கெல்லாம் சொல்வதுஎன்னவென்றால், நான் ஏழைகளின் ஜாதி, ஏழ்மைதான் எனது அடையாளம். திறமையான அரசு அமைய மக்கள் வாக்களிப்பார்கள், எதிர்க்கட்சிகளை தோற்கடிப்பார்கள் என்று பிரதமர் மோடி ஆவேசமாகப் பேசினார்

மக்களழவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. 6 கட்டத் தேர்தல் நடந்து வரும் நிலையில், 7-வது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பிரதமர் மோடி இன்று ஈடுபட்டார்.

உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள தியோரியா, குஷிநகரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரைமட்டமாக தோற்பார்கள். ஏனென்றால், மக்கள் திறமையான அரசுக்கும், நேர்மையான அரசுக்கும்தான் வாக்களிப்பார்கள்.

உத்தரப்பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இருந்த காலத்தைச் சேர்த்தால்கூட நான் குஜராத்தில் முதல்வராக இருந்த காலத்துக்கு அருகே வரமுடியாது. நான் முதல்வராக இருந்த காலத்தில்  என் மீது ஒரு சிறு ஊழல் புகார் கூட வந்ததில்லை.

ஆனால், எதிர்க்கட்சிகளும், சாதிக்கட்சிகளும் என்னிடம் என் ஜாதி குறித்து சான்றிதழ் கேட்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புதெல்லாம், நான் ஏழைகளின் ஜாதி, ஏழ்மைதான் எனது அடையாளம், நான் ஒருபோதும் ஜாதி அரசியலில் ஈடுபட்டதில்லை, எனக்கு தேவையும் இல்லை.

மாறாக மக்களின் ஆசி மட்டுமே எனக்கு போதும். என்னிடம் ஜாதிச் சான்றுகேட்கும் அவர்களிடம் சொல்கிறேன், நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியாக இருக்கலாம், ஆனால், நாட்டை உலகில் முதலிடத்துக்கு கொண்டுவருவதுதான் எனது கனவு என்று கூறுவேன்.

நான் ஏழ்மையை சந்தித்து இருக்றேன், அதன் வலியை உணர்ந்திருக்கிறேன், அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். ஏழைகளின் ஆசியால், நாட்டை ஆளும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

குஜராத் முதல்வராக இருந்தபின், இந்த பிரதமர் பதவி நீங்கள் எனக்கு கொடுத்தது. நானும், எனது குடும்பத்தாரும் ஒருபோதும் அதிகாரத்தை, பதவியை தவறாகப் பயன்படுத்தியதில்லை. என் குடும்பத்தை நான் ஏழ்மை நிலையில் இருந்து வசதிபடைத்தவர்களாக மாற்றவும் இல்லை.

ராஜஸ்தானில் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்தும் பேசும் மாயாவதி, முதலைக் கண்ணீர் விடுகிறார். நீங்கள் உண்மையிலேயே அந்த பெண் மீது இரக்கம் கொண்டவராக இருந்தால், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெற முடியுமா.

மகா கலப்படக் கூட்டணியான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு ராஜஸ்தான் மிகப்பெரிய உதாரணம். தலித் பெண் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார், ராஜஸ்தானில் உள்ள மைனாரிட்டி காங்கிரஸ் அரசு அதை மூடி மறைக்க முயல்கிறது.

லக்னோ விருந்தினர் மாளிகையில் மாயாவதி தாக்கப்பட்டபோது இந்த தேசமே வருத்தப்பட்டது, வலியால் துடித்தது. ஆனால், இப்போது நீங்கள் தலித் பெண்ணுக்காக வருத்தப்படாதமைக்கு காரணம் என்ன.

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இரு தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றுள்ளனர். தீவிரவாதிகளை கொல்வதற்கு தேர்தல் ஆணையத்திடம் நமது வீரர்கள் அனுமதி பெற முடியுமா. எதிர்க்கட்சிகள் என்ன நாடகம் போடுகிறார்கள். தேர்தல் நடப்பதற்கும் எல்லையில் தீவிரவாதிகளை சுடுவதற்கும் என்ன தொடர்பு  இருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்த 3-வது நாளில் இருந்தே தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகிறார்கள். என்னுடைய பணி இதுதான்.

சவுகிதார்(காவலாளி) மீது மக்கள் இவ்வளவு அன்பு வைத்திருப்பதைப் பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு புரியவில்லை. தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதத்துக்கும் எதிராக பாஜக போரிட்டு வருவதால், மக்கள் மோடிக்கும், பாஜகவுக்கும் வாக்களிக்கிறார்கள். சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த திறமையில்லாதவர்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close