[X] Close

தேர்தலில் மோடியின் தந்திரம் பலிக்காது: காங்கிரஸ் வேட்பாளர் சத்ருஹன் சின்ஹா கருத்து


  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:38 am
  • அ+ அ-

பாஜகவில் இருந்து விலகி கடந்த மாதம் காங்கிரஸில் இணைந்த சத்ருஹன் சின்ஹா மீண்டும் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜக தலைவர்கள் சர்வாதிகாரிகளாக என்னிடம் நடந்துகொண்டனர். அவர்களின் எதேச்சதிகார போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. இதனால்தான் நான் பாஜகவின் தலைவர்களை விமர்சித்தேன். இதனால் நான் கட்சியில் ஓரங்கட்டப்பட்டேன். அதிருப்தி அதிகரித்த நிலையில் நான் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தேன்.

அந்தக் கட்சி ஒரு நபர் ராணுவம் போல செயல்படுகிறது. இரண்டு தலைவர்கள் (மோடி, அமித் ஷா) இணைந்து கட்சியை ஆண்டு வருகின்றனர். இரவோடு இரவாக உத்தரவுகள் பறக்கின்றன. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்ற பிரச்சினைகளால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

தற்போது மீண்டும் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறேன். மூன்றாவது முறையாக தொடர்ந்து நான் அங்கு தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். தொகுதி மக்கள் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தத் தேர்தலில் பிரதமர் மோடியின் தந்திரம் எதுவும் பலிக்காது.

காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருக்கின்றனர். கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற ஓராண்டு காலத்திலேயே கட்சி 3 மாநிலங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை. இதன்மூலம் முன்மாதிரித் தலைவராக ராகுல் மாறியுள்ளார்.

ராணுவம் செய்த சாதனைகளை பாஜக செய்துள்ளதாக கூறி வாக்குகளை சேகரிக்கிறார் பிரதமர் மோடி. ராணுவத்தை எதற்காக அரசியலுக்கு இழுக்கிறார். இவர் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியவில்லையா?இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close