[X] Close

அலகாபாத்தில் பாஜக வெற்றிக்கு பாடுபடும் கைதி அத்தீக்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:39 am
  • அ+ அ-

-ஆர்.ஷபிமுன்னா

உத்தரபிரதேசத்தில் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்பு டையவர் அத்தீக் அகமது. இவர் மீது கொலை, ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பாஜக கூட்டணியில் வகிக்கும் அப்னா தளம் கட்சியின் தலைவராக 1999 முதல் 2003 வரை இருந்தார் அத்தீக். பிறகு சமாஜ்வாதியில் இணைந்தவர், அலகாபாத்தின் அருகிலுள்ள பூல்பூர் தொகுதியில் 2004 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார்.

அத்தீக்கை 2008-ல் சமாஜ்வாதி நீக்கிவிட 2009-ல் மக்களவைக்கு மீண்டும் அப்னா தளத்தில் இணைந்து பிரதாப்கரில் போட்டி யிட்டு தோல்வி அடைந்தார்.

அலகாபாத் மேற்கில் இடைத் தேர்தல் வந்த போது அங்கு போட்டி யிட்ட ராஜு பாலின் மனைவி பூஜா பாலை சிறையில் இருந்தபடி அப்னா தளம் சார்பில் எதிர்த்தார் அத்தீக்.

ஆனால், இந்தமுறை, அவர் அலகாபாத்தின் நைனி சிறையில் இருந்தபடி அலகாபாத்தின் பாஜக வேட்பாளரான ரீட்டா பகுகுணா ஜோஷி வெற்றிக்காக பாடுபட்டு வருகிறார்.

அத்தீக்கின் மனைவியான ஷாயிஸ்தா பர்வீனும் பாஜக வேட் பாளர் ரீட்டாவுக்காக முஸ்லிம்கள் இடையே பிரச்சாரம் செய்து வருகிறார். இத்துடன் அத்தீக்கின் சுமார் 500 அடியாட்களும் பாஜகவின் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். இங்கு காங்கிரஸ் சார்பில் அலகாபாத்தை சேர்ந்தவரான யோகேஷ் சுக்லா போட்டியிடுகிறார்.

அலகாபாத்தில் பாஜக சார்பில் 2009-ல் போட்டியிட்ட சுக்லா காங்கிரஸில் இணைந்துள்ளார். இவர் தம்முடைய முன்னாள் சகா என்பதால் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷியின் ரகசிய ஆதரவும் சுக்லாவுக்கு கிடைத்து வருகிறது.

மாயாவதியின் பகுஜன் சமாஜும், அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதியும் அமைத்த மெகா கூட்டணி சார்பில் ராஜேந்திரசிங் படேல் போட்டியிடுகிறார். அலகாபாத்தில் கணிசமாக இருக்கும் படேல் சமூக வாக்குகள் இந்த சமாஜ்வாதி வேட்பாளருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இதனிடையே, நைனி சிறையில் இருந்த அத்தீக் வெகுதூரம் உள்ள பரேலி சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார். தேர்தல் அறிவிப்பிற்கு பின் கடந்த மாதம் அவர் மீண்டும் நைனி சிறைக்கு மாற்றப்பட்டதிலும் உ.பி. பாஜக அரசின் ரகசிய திட்டம் இருப்பதாகவும் புகார் உள்ளது.

அதேபோல், சிறையில் இருந்தபடி அருகிலுள்ள வாரணாசியிலும் அத்தீக் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

இவரால் வாரணாசியில் முஸ்லிம் வாக்குகள் பிரியும் என நம்பி அதிலும் பாஜகவின் பங்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அங்கு மீண்டும் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

அலகாபாத்தில் வாக்குப்பதிவு இன்று மே 12-ல் நடைபெறுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close