[X] Close

மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு 20 காங். எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவார்கள்: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பரபரப்பு தகவல்


20

  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:32 am
  • அ+ அ-

-இரா.வினோத்

மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20 பேர் பாஜகவில் இணைவார்கள். இதனால் விரைவில் பாஜக ஆட்சி அமையும் என அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு, வாரியத் தலைவர் பதவி பகிர்வு உள்ளிட்டவற்றில் இரு கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீட்டு விவகாரத்திலும் காங்கிரஸ் - மஜத மோதல் நீடிக்கிறது.

இந்நிலையில் குமாரசாமியின் அமைச்சரவையில் பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஹார்கிஹோளி உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனிடையே அதிருப்தி எம்எல்ஏக்கள் 5-க்கும் மேற்பட்டோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப்போவதாக எச்சரித்துள்ளனர். இதனால் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறும்போது, ‘‘வருகிற 23-ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். காங்கிரஸின் 20 எம்எல்ஏக்கள் 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜகவில் இணைவார்கள். இதனால் கர்நாடகாவில் விரைவில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது''என்றார்.

எங்கிருந்து பணம் வரும்?

எடியூரப்பாவின் இந்த கருத்து கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதல்வர் குமாரசாமி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பாஜக குதிரை பேரத்தை தொடங்கி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறும்போது, ‘‘எடியூரப்பா மீண்டும் முதல்வராக துடிக்கிறார். பெரும்பான்மை இல்லாததால் 3 நாட்களில் முதல்வர் பதவியை இழந்ததை மறந்துவிட்டார். அவரது பதவி ஆசையால் தனக்கு இருந்த கவுரவத்தை இழந்துவிட்டார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20 பேர் அதிருப்தியில் இருப்பதாக பொய் கூறுகிறார்.

எல்லா கட்சியிலும் ஒரு சில எம்எல்ஏக்கள் சில முடிவுகளால் அதிருப்தியில் இருப்பார்கள். அதுபோல காங்கிரஸிலும் சிலர் இருக்கிறார்கள். பாஜகவிலும் சிலர் இருக்கிறார்கள். பாஜகவில் இருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்களை நாங்கள் வாங்க முயற்சிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆசையை பாஜக தூண்டி, குதிரை பேரம் மூலம் வாங்க முயற்சிக்கிறது. 20 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க, பாஜகவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?அண்மையில் பதவியை ராஜினாமா செய்த உமேஷ் ஜாதவை பாஜகவினர் பல கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதற்கான ஆடியோ ஆதாரங்கள் வெளியாகி இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்கள். குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்''என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close