[X] Close

அசாமில் ரத்த தானம் செய்வதற்காக ரம்ஜான் நோன்பை பாதியில் கைவிட்ட இளைஞர்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:06 am
  • அ+ அ-

அசாம் மாநிலத்தில் ரத்த தானம் செய்வதற்காக ரம்ஜான் நோன்பை பாதியிலேயே கைவிட்டு அனைவரது பாராட்டுதலையும் பெற்றுள்ளார் ஓர் இளைஞர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது பனாவுல்லா அகமது (26). குவாஹாட்டி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்றி வருகிறார். இவரது ரத்தப் பிரிவு ‘பி’ பாஸிட்டிவ். ரத்த தானம் செய்யும் தன்னார்வ குழுவான ‘டீம் ஹியூமேனிட்டி’ அமைப்பின் உறுப்பினராக உள்ளார். இவர் பணிபுரியும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கில் டெக்னீசியனாக பணியாற்றி வருபவர் தபஷ் பகவதி. இவர்கள் இருவரும் ஓர் அறையில் தங்கி உள்ளனர்.

அகமது ரம்ஜான் நோன்பு கடைப்பிடித்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலையில் பகவதி சோகமாக இருப்பதை அகமது பார்த்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்வதற்காக ‘ஓ’ பாஸிட்டிவ் ரத்தம் தேவைப்படுவதாகவும், ஆனால் ரத்தம் கிடைக்கவில்லை என்றும் பகவதி தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் அகமது ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளார்.

இதையடுத்து, இருவரும் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அகமது ஒரு யூனிட் ரத்தத்தை (பி பாஸிட்டிவ்) தானம் செய்தார். இதை தங்களது ரத்த வங்கியில் சேமித்து வைத்துக்கொண்ட மருத்துவமனை, ஒரு யூனிட் ஓ பாஸிட்டிவ் ரத்தத்தை நோயாளிக்கு வழங்கியது. இதையடுத்து, அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் குணமடைந்து வருகிறார். இதுகுறித்து பகவதி கூறும்போது, “பல இடங்களில் கேட்டும் ரத்தம் கிடைக்கவில்லை. அகமது ரத்தம் கொடுக்க முன்வந்தபோதும் அவர் நோன்பை கைவிட வேண்டியிருக்கும் என்பதால் அதை மறுத்தேன். ஆனால், ரத்த தானம் செய்வதில் அவர் உறுதியாக இருந்தார்” என்றார். அகமது கூறும்போது, “ரத்த தானம் செய்வது குறித்து முஸ்லிம் மத போதகர்களிடம் ஆலோசித்தேன். அவர்கள் ரத்த தானம் செய்யுமாறு என்னை ஊக்குவித்தனர். அதேநேரம், தானம் செய்த பிறகு உடல் பலவீனமடையும் என்பதால் விரதத்தை தொடர வேண்டாம் என ஆலோசனை கூறினர். இதையடுத்து, விரதத்தைக் கைவிட்டு சாப்பிட வேண்டியதாயிற்று” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close