[X] Close

எனக்கு ஒரே ஒரு சாதிதான்: உத்தரப் பிரதேசத்தில் மோடி உருக்கம்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 16:39 pm
  • அ+ அ-

இப்போது மோடியின் சாதி என்ன என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். மோடிக்கு ஒரேயொரு சாதிதான் என்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி உருக்கமாகப் பேசினார்.

கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா பகுதியில் பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:

''சரியாக 21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்தியா, 'ஆபரேஷன் சக்தி' என்ற பெயரில் பொக்ரானில் அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. தங்களுடைய கடின உழைப்பின் மூலம் நாட்டுக்கு நற்புகழைத் தேடித்தந்த விஞ்ஞானிகளின் முன்னால் நான் தலைவணங்குகிறேன். 1998-ல் நடந்த இந்த வரலாற்றுச் சம்பவம், வலிமையான அரசியல் நிலைப்பாடு இருந்தால் எப்படி தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதைக் காண்பித்தது.

முந்தைய மெகா கூட்டணியால், நம்முடைய உளவுத்துறை அமைப்புகள் வலிமை இழந்தன. வாஜ்பாய் அரசு அமைந்தவுடன் அது சரியாக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எப்போதுமே அந்த ஆற்றல் இருந்திருக்கிறது. ஆனால் அத்தகைய முடிவை எடுக்கும் தைரியம் வாஜ்பாய் அரசுக்கு முன்பு இருந்த அரசுகளுக்கு இல்லை. தேசத்தின் பாதுகாப்பையே முன்னுரிமையாகக் கொண்டவர்களால் மட்டுமே இதைச் சாதிக்க முடியும்.

பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அரசின் சாதனைகளுக்குப் பிறகு, மத்தியில் வலிமையற்ற ஓர் அரசு உருவானது.

1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து காங்கிரஸ் தலைவருக்கு நெருக்கமானவர், நடந்தது நடந்துவிட்டது என்கிறார். இது அக்கட்சியின் மனநிலை மற்றும் குணநலனைக் காட்டுகிறது. காங்கிரஸின் அகந்தையையும் பிரதிபலிக்கிறது.

இப்போது மோடி என்ன சாதியைச் சேர்ந்தவர் என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். மோடிக்கு ஒரேயொரு சாதிதான். இந்த தேசத்தின் ஏழை மக்கள் என்ன சாதியோ, நானும் அதே சாதிதான். யாரெல்லாம் தங்களை பின் தங்கியவர்கள் என்று நினைக்கிறார்களோ அவர்களின் சாதியைச் சேர்ந்தவன் நான்'' என்றார் மோடி.. 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close