[X] Close

2002-ல் மோடி முதல்வராக இருந்த குஜராத் அரசை கலைக்க வாஜ்பாய் விரும்பினார், அத்வானி தடுத்தார்: யஷ்வந்த் சின்ஹா பரபரப்பு


2002

  • kamadenu
  • Posted: 11 May, 2019 11:33 am
  • அ+ அ-

-Muthukumar R_50162

கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு 2002-ல் குஜராத்தில் பெரிய மதக்கலவரம் வெடித்த போது முதல்வர் நரேந்திர மோடியின் ஆட்சியை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கலைக்க விரும்பினார், ஆனால் அதை அத்வானிதான் தடுத்து நிறுத்தினார் என்று முன்னாள் பாஜக தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பரபரப்பு பேட்டியளித்தார்.

 

அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி தான் ராஜினாமா செய்து விடுவேன் என்று மிரட்டினார், அதனால் வாஜ்பாய் பின் வாங்க நேரிட்டது என்று கூறியுள்ளார் யஷ்வந்த் சின்ஹா.

 

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறிய போது, ஐஎன்எஸ் விராட் கடற்படை கப்பலை ராஜீவ் காந்தி துஷ்பிரயோகம் செய்தாரா இல்லையா என்பதெல்லாம் ஒரு விஷயமா, அது விஷயமேயல்ல என்ற யஷ்வந்த் சின்ஹா, “முதல்வர் நரேந்திர மோடி அப்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்று வாஜ்பாய் விரும்பினார்.  கோவாவில் செயற்குழு கூட்டத்திற்கு வாஜ்பாயி செல்லும் போது மோடி ராஜினாமா செய்யவில்லையெனில் அவரது ஆட்சியைக் கலைக்க வாஜ்பாயி முடிவு செய்ததாகக் கூறுகிறார் யஷ்வந்த் சின்ஹா.

 

“கட்சிக்குள் கூட்டம் நடந்தது. எனக்குக் கிடைத்த தகவல்களின் படி மோடி அரசை கலைத்தால் தான் அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அத்வானி தெரிவித்துள்ளார். ஆகவே வாஜ்பாயி அந்த முடிவைக் கைவிட நேர்ந்தது, அதனால் மோடிஜி தொடந்து முதல்வராக நீடிக்க முடிந்தது.

 

ஐ.என்.எஸ். விராட்டை ராஜீவ் காந்தி துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த விவகாரம் ஒன்றுமில்லை, அது அவ்வாறு நடக்கவில்லை என்று முன்னாள் கடற்படை அதிகாரிகள் விளக்கம் அளித்து விட்டனர். ஆனால் ஒரு பிரதமராக மோடி இப்படியெல்லாம் பேசுவது கவுரவக்குறைவானது. லோக்சபா தேர்தல் அரசு எப்படி செயல்பட்டது என்பதைத் தீர்மானிக்கும் விஷயமே தவிர நாட்டின் வரலாற்றை தீர்மானிப்பது அல்ல.

 

பாகிஸ்தானை தேர்தல் பிரச்சாரத்தில் இழுப்பது...

 

யஷ்வந்த் சின்ஹா மேலும் கூறும்போது,  “தேர்தல்களின் போது பாகிஸ்தானை இழுத்தது துரதிர்ஷ்டவசமானது. நாம் பாகிஸ்தான் போன்ற நாட்டு வகையைச் சேர்ந்தவர்களா என்ன? சீனா பற்றி பேசவில்லை. பாகிஸ்தான் பற்றி பேசியது குறித்து சீனா மகிழ்ச்சியடைந்திருக்கும். ஏனெனில் சீனாவைப் பற்றி பேசினால் யார் காது கொடுத்து கேட்பார்கள், பாகிஸ்தானை இழுத்தால்தான் மக்கள் கவனிப்பார்கள்.

 

பொருளாதார ரீதியாக நாடு பின்னடைவைச் சந்தித்துள்ளது. அடுத்த அரசு ‘உடைந்த பொருளாதார நிலைமைகளை’ சந்திக்கும்.

 

ஒரு பிரதமர் எது பேசினாலும் அவரிடமிருந்து ஒரு கவுரவமான பேச்சையே எதிர்பார்க்கிறோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை.

 

இவ்வாறு கூறினார் யஷ்வந்த் சின்ஹா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close