[X] Close

சீக்கியப் படுகொலை குறித்து கருத்து: சாம் பித்ரோடாவை மன்னிப்பு கேட்கச் சொன்ன ராகுல் காந்தி


  • kamadenu
  • Posted: 11 May, 2019 11:19 am
  • அ+ அ-

சீக்கியப் படுகொலை குறித்து 'நடந்தது நடந்துவிட்டது' என்று கூறியிருந்த வெளிநாடுகள் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சாம் பித்ரோடாவின் கருத்து சர்ச்சையானதை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

 

அண்மையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு பிரதமர் ராஜீவ் காந்தியின் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பாஜக கூறியிருந்தது. இதுகுறித்துக் கருத்து தெரிவித்த காங்கிரஸின் சாம் பித்ரோடா, ''இதுவும் அவர்களின் மற்றொரு பொய். 1984-ல் நடந்தது குறித்து இப்போது என்ன கவலை? கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தீர்களோ அதைப் பற்றிப் பேசுங்கள். 1984-ல் நடந்தது, நடந்துவிட்டது'' என்று பேசியிருந்தார்.

 

இதுகுறித்து ஆன்லைன் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ராகுல் காந்தி, ''இது முற்றிலும் தேவையில்லாத பேச்சு என்று நினைக்கிறேன். இதற்கு அவர் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும். 1984 சம்பவம் ஒரு சோக நிகழ்வு. அது மக்களுக்கு பயங்கரமான வலியை ஏற்படுத்தி விட்டது. இதுகுறித்துக் கருத்து தெரிவித்த பித்ரோடா அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார்.

 

இதைத்தொடர்ந்து சாம் பித்ரோடா, ''சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக, உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பாஜக பரப்பி வருகிறது. எனினும் எனது பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்'' என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

 

1984-ல் தன்னுடைய சீக்கிய பாதுகாவலர்களாலேயே அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட இனப்படுகொலையில் சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

சீக்கியப் படுகொலை விவகாரம் குறித்த விவாதம் பஞ்சாப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மே 19 வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close