[X] Close
 

லினியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்: நிபாவுக்கு பலியான கேரள நர்ஸின் கணவர் உருக்கம்


proud-of-her-says-husband-of-nurse-who-died-after-treating-nipah-patient

  • பாரதி
  • Posted: 24 May, 2018 13:07 pm
  • அ+ அ-

நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான கேரள நர்ஸ் லினியைப் பற்றி அவரது கணவர் உணர்வுப்பூர்வமாகப் பேசியுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பெரம்பரா மருத்துவமனையிலும் வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் சிலர் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய சிகிச்சைக்கு லினி (31) என்ற நர்ஸ் உதவி செய்து வந்தார். ஆனால், அதே நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 20) இரவு அவர் உயிரிழந்தார். 

இறப்பதற்கு முன்னர், ‘‘சாஜி சேட்டா.. எனது முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். உங்களை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நமது குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். அவர்களை உங்களுடன் வளைகுடாவுக்கு அழைத்து சென்றுவிடுங்கள். நமது தந்தையைப் போல் அவர்களும் தனியாக இருக்க வேண்டாம். அன்புடன் லினி’’ என்று எழுதியுள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வாசிப்பவரை கண்கலங்க வைத்தது.

இந்நிலையில், அவரது கணவர் சஜீஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நர்ஸிங் வேலை மிகவும் கடினமானது. எனது மனைவியை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். லினி என்னுடன் கடந்த புதன்கிழமை போனில் பேசினார். அப்போது, காய்ச்சல் அடிப்பதுபோல் இருக்கிறது என்றார். ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு நான் கூறினேன். ஆனால், அவரோ மருத்துவமனையில் நிறைய நோயாளிகள் இருக்கின்றனர். நான் வேலைக்குச் சென்றே ஆக வேண்டும் எனச் சொன்னார். அதன் பின்னர், விஷயமரிந்து ஞாயிற்றுக்கிழமை காலை நான் மருத்துவமனைக்குச் சென்றேன். 2 நிமிடங்கள் மட்டுமே என்னால் அவரைப் பார்க்க முடிந்தது. அவருக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டிருந்தது. அதனால், எங்களால் பேசிக்கொள்ள முடியவில்லை. நான் அவர் மீது எனது கையை வைத்தேன். அப்போது அவருக்கு சுயநினைவு இருந்தது. லினியை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்" என்றார்.

எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தைகள்..
லினி வந்துவிடுவார் என அவரது குழந்தைகள் சித்தார்த் (5), ரிதுல் (2) காத்துக்கொண்டிருக்கின்றனர். தாயை இழந்து தவிக்கும் அந்த குழந்தைகளுக்கு மாநில அரசு தலா ரூ.10 லட்சம் அறிவித்துள்ளது. சஜீஸுக்கு அரசு வேலையும் தருவதாக உறுதியளித்துள்ளது.

லினி மறைந்துவிட்டார் அவர் சேவை என்றும் மறையாது. அவரை நினைத்து இன்னும் அழுதுகொண்டிருக்கின்றனர் பெரம்பரா மருத்துவமனை செவிலியர்.

ஷைனி மோல் எனும் செவிலி கூறும்போது, "முதன்முதலில் நிபா தாக்கப்பட்ட வந்தவரை நாங்கள் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவராகக் கருதியே சிகிச்சை அளித்தோம். அப்போது நிபா பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், லினி அவள் பணியில் உண்மையாக இருந்தாள். இன்று நாங்கள் எல்லோரும் மாஸ்க், க்ளோவ்ஸ் என பாதுகாப்புடன் இருக்கிறோம். லினியை நினைத்துக் கொண்டுதான் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். லினிக்கு நேர்ந்தது இனி யாருக்கும் நேரக்கூடாது" என கண்ணீர் மல்க பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close