[X] Close
 

ரம்ஜான் நோன்பை கைவிட்டு, சிறுவனைக் காப்பாற்றிய மனிதர்: பிஹாரில் நெகிழ்ச்சி சம்பவம்


ramzan-fasting-story

கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 23 May, 2018 18:02 pm
  • அ+ அ-

பிஹாரைச் சேர்ந்த ஜாவேத் ஆலம் என்ற நபர் தனது ரம்ஜான் நோன்பைக் கைவிட்டு, ராஜேஷ் குமார் என்ற எட்டு வயது சிறுவனுக்கு ரத்த தானம் அளித்து அவனது உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.

அவசர சிகிச்சைக்காக ராஜேஷை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார் அவனது தந்தை. தலசீமியா என்ற நோயால் பாதிக்கப்பட்ட ராஜேஷுக்கு உடல் சோர்வு இருந்தது. உடனடியாக இரத்த மாற்றம் தேவைப்பட்டது. தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு 3-4 வாரங்களுக்கு ஒரு முறை இரத்த மாற்று அவசியம். 

ஆனால் ராஜேஷின் ரத்தப் பிரிவு உடனடியாக ரத்த வங்கியில் கிடைக்கவில்லை. இன்னும் குறைந்தது 2-3 நாட்களாவது ஆகும் என அவர்கள் கை விரிக்க, சிறுவனின் நிலை கவலைக்கிடமானது. 

இரத்த மாற்றத்துக்காக 200 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ரத்த வங்கியில் நம்பிக்கையின்றி காத்திருந்தார் ராஜேஷின் தந்தை. அப்போது மருத்துவமனையில் துப்புரவுப் பணியில் இருந்த ஒருவர், மாவட்ட ரத்த தானக் குழுவைச் சேர்ந்த அன்வர் ஹுசைனிடம் இந்த சிறுவன் குறித்து தெரிவித்துள்ளார். 

உடனே ஹுசைன் அவரது நண்பர் ஜாவேத் ஆலமிடம் இதைப் பற்றி பேசினார். ஜாவேதும் ரத்த தானக் குழுவில் உறுப்பினரே. 

"கவலைக்கிடமாக இருந்த ஒரு தலசீமியா நோயாளிக்கு ரத்த தானம் செய்யுமாறு எனது நண்பன் அன்வர் என்னிடம் கூறிய போது, நான் ரம்ஜான் நோன்பில் இருப்பதாக அவரிடம் தெரிவித்தேன். 

ஆனால் அவர் என்னை சம்மதிக்க வைத்து மருத்துவமனைக்கு வரவழைத்தார். மருத்துவர்களிடம் பேசினோம். மருத்துவர்கள் நான் நோன்பில் இருப்பதால் முதலில் ரத்த தானம் செய்ய அனுமதிக்கவில்லை. நான் எனது நோன்பை கைவிட்டு பழச்சாறும், சிறிது உணவும் உண்ட பின்னரே அவர்கள் எனது ரத்தத்தை எடுத்துக் கொள்ள சம்மதித்தனர். 

எனது மதம் சக மனிதனுக்கு உதவுவதையே முதலில் சொல்லிக் கொடுத்துள்ளது. அதனால் தான் எனது நோன்பைக் கைவிட்டு, சிறுவன் ராஜேஷைக் காப்பாற்ற ரத்த தானம் செய்தேன். அனைத்தையும் விட மனிதமே பெரியது என்று இஸ்லாம் கூறுகிறது" என்று ஜாவேத் கூறினார்.

- ஐஏஎன்எஸ்

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close