[X] Close
 

அன்று சிகிச்சைக்குப் பணமின்றி தங்கையை இழந்தார்; இன்று இலவச மருத்துவமனை கட்டினார்


taxi-driver-who-built-a-hospital-for-the-poor-since-his-sister-died-due-to-lack-of-medical-intervention

  • kamadenu
  • Posted: 15 May, 2018 17:32 pm
  • அ+ அ-
நம்முடைய அன்பானவரின் இழப்பு நமக்கு எதிர்பாராத பேரிடியாக இருக்கும். அதுவும், மருத்துவ வசதி இல்லாமல் அல்லது  பொருளாதார உதவி இன்றி நம் அன்பானவரை இழக்கும்போது, தேவையான நேரத்தில் உதவி கிட்டியிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாமே எனத் தோன்றும். அப்படி, எந்த உதவியும் இல்லாமல் ஒருவரை இழக்கும்போது, அதே உதவி வருங்காலத்தில் யாருக்காவது தேவைப்பட்டால் எப்படியாவது அரும்பாடுபட்டு அந்த உதவியை செய்துவிடுவோம். 
 
அப்படித்தான், கொல்கத்தாவை சேர்ந்த சைதுல் லஷ்கார் என்பவர் தன் தங்கையை மருத்துவ உதவி கிட்டாமல் நோய் ஒன்றால் இழந்தபோது, நலிந்தவர்களுக்காக மருத்துவமனை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று எடுத்த சபதத்தை 12 ஆண்டுகள் கழித்து நிறைவேற்றியிருக்கிறார். 
 
சைதுல் லஷ்காரின் தங்கை மரூஃபா கடந்த 2004-ம் ஆண்டு மார்பக தொற்று காரணமாக, போதிய மருத்துவ உதவி கிட்டாமல் 17-வது வயதில் உயிரிழந்தார். தன் தங்கைக்காக யாரும் நிதியுதவி செய்ய முன்வராததும், அதனால் தன் தங்கை இறந்ததும் சைதுலை வெகுவாக பாதித்தது.
 
அதனால், மருத்துவ உதவி தேவைப்படுப்பவர்களுக்கு, பண வசதி இல்லாத நலிந்தவர்களுக்காக மருத்துவமனை கட்டியே ஆக வேண்டும் என்பதை சபதமாகவே ஏற்றார் சைதுல். தற்போது, கொல்கத்தாவில் புன்ரி எனும் கிராமத்தில் மரூஃபா ஸ்மிருதி என தன் தங்கையின் பெயரால் மருத்துவமனையை கட்டியுள்ளார்.
 
“என் தங்கையை போல் வறுமையின் காரணமாக சிகிச்சைக்குப் பணமின்றி யாரும் இறந்து விடக்கூடாது என்பதற்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். நான் என் தங்கையை இழந்தது போல எந்தவொரு சகோதரனும் தன் தங்கையை இழக்கக் கூடாது என நினைத்தேன்" என்கிறார் சைதுல்.
 
டாக்ஸி ஓட்டுநரான சைதுல் தன்னுடைய விருப்பத்தை பல ஆண்டுகளாக பயணிகளிடம் சொல்லி வந்திருக்கிறார். எல்லோரும் உதவவிட்டாலும் கூட, சிலர் சைதுலின் நல்லெண்ணத்துக்காக நிதியுதவி செய்திருக்கின்றனர். ஒருமுறை சிருஷ்டி கோஷ் என்ற பயணி, தன்னுடைய ஒரு மாத சம்பளத்தையே சைதுலுக்கு வழங்கியிருக்கிறார்.
 
“என் மனைவி ஷமீமா இல்லாமல் இது நடந்திருக்காது. என்னுடைய விருப்பத்தை அறிந்து எனக்கு நெருக்கமான பலரும் என்னை விட்டு விலகினர். என்னை பைத்தியக்காரன் என்றனர். ஆனால், என்னுடைய மனைவி தான் இந்தப் பயணம் முழுவதும் என் உடன் இருந்தார். இந்த மருத்துவமனைக்கான நிலத்தை வாங்க தன்னுடைய நகைகள் முழுவதையும் தந்தார்”, என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் சைதுல்.
 
கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி மருத்துவமனையை கட்டி முடித்த சைதுல், ஒரு மாத சம்பளத்தை வழங்கிய பயணி சிருஷ்டி கோஷை அழைத்து திறப்பு விழா நடத்தினார். இந்த மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் கூடிய உயர்தர மருத்துவமனையாக மாற்றுவதே சைதுலின் விருப்பமாக உள்ளது. 8 மருத்துவர்களைக் கொண்டுள்ள இந்த மருத்துவமனையில் சிகிச்சை முழுவதும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. 
 
“என்னுடன் இப்போது நிறைய பேர் துணையாக உள்ளனர். என்னுடைய அடுத்த இலக்கை நோக்கி நான் செல்லலாம் என தோன்றுகிறது. ஒரு மருத்துவமனையுடன் நான் நிறுத்திக் கொள்ளமாட்டேன். புதிய கனவுகளை தேடி நான் பயணிப்பேன் என நினைக்கிறேன்” என்கிறார் சைதுல் நம்பிக்கையுடன்.
 
சைதுலின் நல்லெண்ணத்தை பிரதமர் மோடியும் ‘மான் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
- ஐஏஎன்எஸ்

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close