[X] Close
 

ரயில் நிலைய வைஃபை மூலம் படித்து அரசு வேலைக்கு தேர்வான சுமை தூக்கும் தொழிலாளி


coolie-used-railway-wifi-to-crack-kerala-civil-services-exam

  • kamadenu
  • Posted: 12 May, 2018 17:26 pm
  • அ+ அ-

இந்திய ரயில்வே துறை கடந்த 2016-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்துடன் இணைந்து முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலுக்காக காத்திருக்கும்போது பயணிகள் வைஃபை வசதியை பயன்படுத்தி தங்கள் நேரத்தைக் கழிப்பர். ஆனால், கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இளைஞர் ஒருவர், இலவச வைஃபையை பயன்படுத்தி, அதன் மூலம் படித்து கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றிபெற்று அரசு வேலைக்கு தேர்வாகியுள்ளார். 

கே.ஸ்ரீநாத் - தன் பொருளாதாரம் இடம் தராவிட்டாலும், கூலித் தொழிலாளியாக இருந்துகொண்டே இலவச வைஃபை மூலம் படித்து அரசு வேலை பெற்ற சாதனைக்கு சொந்தக்காரர். ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் வேலை ஏதும் இல்லாத சமயங்களில், ஒரு மூலையில் அமர்ந்து செல்போன் மூலம் தேர்வுக்கு நோட்ஸ் எடுத்துக் கொண்டிருப்பாராம் ஸ்ரீநாத். அதுமட்டுமல்ல, சுமைகளை தூக்கும்போதும், ட்ராலியில் வைத்து அவற்றை தள்ளும்போதும் காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு தேர்வுக்கான பாடங்களை ஆடியோ மூலம் கேட்டு மனதில் நோட்ஸ் எடுத்துக் கொள்வார் ஸ்ரீநாத்.

அவருடைய சாதனை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

“கேரள அரசு பணியாளர் பணிக்கு நான் மூன்று முறை முயற்சித்துள்ளேன். ஆனால், இம்முறை நடந்த தேர்வுக்குத் தான் முதன்முறையாக ரயில் நிலைய இலவச வைஃபை வசதியை பயன்படுத்திக் கொண்டேன். சுமைகளை தூக்கும்போது கூட இயர்போன் வழியாக பாடங்களை ஆடியோ மூலம் கேட்டுக் கொள்வேன். மனதிலேயே கேள்விகளுக்கான பதிலை தீர்த்துக் கொள்வேன். இதன் மூலம், என்னால் வேலை பார்க்கும் அதே சமயத்தில் படிக்கவும் முடிந்தது. இரவு நேரத்தில் கிடைக்கின்ற ஓய்வு நேரத்தில் நான் படித்தவற்றை மீண்டும் ஒருமுறை ரிவைஸ் செய்வேன்” என்கிறார் ஸ்ரீநாத்.

மூணாறை சேர்ந்த ஸ்ரீநாத், ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதி மூலம் புத்தகங்கள், முந்தைய ஆண்டுகளின் கேள்வித் தாள்களை தரவிறக்கம் செய்து கொள்வது பயனுள்ளதாக உள்ளது என தெரிவிக்கிறார். தன்னுடைய கிராமத்திலேயே பணியாற்ற வேண்டும் என்பது தான் ஸ்ரீநாத்தின் விருப்பமாக உள்ளது.

“நான் தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பேன். என் குடும்பத்திற்கான தேவைகளை நிறைவேற்ற நான் கூலியாக வேலை செய்தேன். ஆனால், நான் தொடர்ந்து படித்து இன்னும் அடுத்தடுத்த தேர்வுகளை எதிர்கொள்வேன். அப்படி செய்யும் போது, இன்னும் எனக்கு உயர்ந்த வேலை கிடைக்கும்", என்கிறார் ஸ்ரீநாத் நம்பிக்கையுடன்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close