[X] Close

தென்னகக் குரலும் முக்கியமானது என்பதை உணர்த்தவே கேரளாவிலிருந்து போட்டி: வயநாட்டில் ராகுல்காந்தி பேச்சு


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 14:24 pm
  • அ+ அ-

-பிடிஐ

கேரள மாநிலம் வயநாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தென்னிந்தியாவில் போட்டியிடுவதன் மூலம் நாட்டின் மற்ற பகுதிகளின் குரலைப் போல் தென்னகக் குரலும் முக்கியமானது என்பதை நிரூபிக்க விரும்புகிறேன் எனப் பேசினார்.

கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பாஜக, பாரத் தர்ம ஜன சேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர் இன்று (புதன்கிழமை) தொகுதிக்குட்பட்ட திருநெல்லி கிராமத்தில் உள்ள மகாவிஷ்ணு கோயிலில் தரிசனம் செய்தார். கேரள கோயில்களின் பாரம்பரிய வழக்கம் மற்றும் விதிகளின்படி வேட்டியும், மேல் துண்டும் அணிந்து தரிசனம் செய்தார்.

பின்னர் வயநாட்டில் சுல்தான் பத்தேரி எனும் இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "நான் பிரதமர் நரேந்திர மோடியைப் போல் 2 கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவேன். உங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ.15 லட்சம் செலுத்துவேன். விவசாயிகள் கேட்பனவற்றை எல்லாம் செய்து கொடுப்பேன் என்று பொய் சொல்ல வரவில்லை. ஏனெனில் நான் உங்களது மதிநுட்பத்தை மதிக்கிறேன்.

உங்களுடன் தேர்தலுக்காக இந்த இரண்டு மாதங்கள் மட்டும் உறவில் இருக்க விரும்பவில்லை. ஆயுள் முழுக்க நீடிக்கும் உறவையே விரும்புகிறேன். வயநாட்டில் உள்ள சகோதரிகள் என்னை சொந்த அண்ணன் போல் உணரவேண்டும் என விரும்புகிறேன். வயநாட்டு அம்மாக்களும் அப்பாக்களும் என்னை தங்கள் சொந்த மகனாக நினைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

பிரதமர் மோடியைப் போல் 'மன் கி பாத்' என்று என் மனதில் பட்டதை மட்டும் சொல்லிச்செல்ல வரவில்லை. உங்கள் பிரச்சினைகளை உணர்ந்து புரிந்து கொள்ள வந்திருக்கிறேன்.

மனிதன் - விலங்குகள் இடையேயான மோதல், இரவுப் பயணங்களுக்கான தடை, மருத்துவ வசதியின்மை போன்ற தொகுதியின் பிரச்சினைகளை உணர்ந்து பேச வந்திருக்கிறேன். உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வந்திருக்கிறேன்.

தென் இந்தியாவில் இருந்து போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தபோதே வயநாடுதான் அதற்கான சிறந்த இடமாக இருக்கும் என உணர்ந்தேன். காரணம், வயநாடு பல்வேறு கருத்தியல்களையும் கலாச்சாரங்களயும் அமைதியாக ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஒற்றுமை பற்றி நாட்டின் மற்ற பகுதிகள் கேரளாவிடமும் வயநாட்டிடமும் கற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், தென்னிந்தியாவில் போட்டியிட நான் விரும்பியதற்குக் காரணம் தென்னகத்தின் குரலும் நாட்டின் மற்ற பகுதிகளைப் போல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என நான் விரும்பினேன். அதனால், உ.பி.,யில் அமேதி, தென்னிந்தியாவில் கேரளத்தின் வயநாட்டில் போட்டியிடுகிறேன்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close