[X] Close

6 ஆண்டுகள் போராடி நிருபித்த திவாரியின் மகன் டெல்லியில் திடீர் மரணம்


6

  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 13:03 pm
  • அ+ அ-

உத்தர பிரதேச மறைந்த முதல்வர் என்.டி.திவாரியின் மகன் என 6 ஆண்டுகள் போராடி நிருபித்த ரோஹித் சேகர் (வயது 40) நேற்று திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்தவர் என்.டி.திவாரி. உபியில் காங்கிரஸ் சார்பில் முதல் அமைச்சராக மூன்று முறை இருந்த திவாரி, அதிலிருந்து உத்தரகண்ட் தனியாகப் பிரிந்தபோது நடந்த முதல் சட்டப்பேரவை தேர்தலிலும் வென்று முதல்வரானார். பின்னர், ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2008-ல் ஆந்திர ஆளுநராக இருந்த திவாரி, தனது தந்தை என ரோஹித் சேகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது பலரும் அதிர்ந்தனர். ஹரியாணா மாநில முன்னாள் அமைச்சரின் மகளான உஜ்வல் தங்கியிருந்த வீட்டில் திவாரி புதிய எம்பியாக குடியேறினார். அப்போது அரசு வீட்டை காலி செய்யாமல் இருந்த உஜ்வலுக்கும் திவாரிக்கும் இடையே காதல் வளர்ந்ததாக கூறபப்பட்டது. அதன் விளைவாக ரோஹித் பிறந்ததாகவும் பின்னர் தெரிய வந்தது.

இதை திவாரி மறுத்து வந்தபோதும், மரபணு சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் ஜூலை 27, 2012-ல் தம் மகனுடன் சமாதானம் செய்து கொள்வதாக இருவரும் கூறி வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதன் பிறகும், திவாரியை சந்திக்க சென்ற அவரது மனைவி உஜ்வல்  அவரது வீட்டு முன் தர்ணா இருந்தார். பின்னர் சமாதானமான திவாரி, 34 ஆண்டுகளுக்கு பிறகு உஜ்வலை 34 வயது மகனான ரோஹித் சேகர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கெனவே மணமானவரான திவாரியின் முதல் மனைவி சுசிலா தேவி திவாரி, பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இதுபோல் ஏற்கெனவே மணமானவரான உஜ்வல் சர்மாவின் கணவர் விவாகரத்து பெற்றவர். 2018-ம் ஆண்டு  திவாரியும் உயிரிழந்தார்.

இந்தநிலையில் தனது தந்தை என்.டி திவாரி என போராடி நிருபித்த மகன் ரோஹித் சேகர் நேற்று திடீரென மரணமடைந்தார். டெல்லியில் வசித்து வந்த அவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவர் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடலில் சில காயங்கள் இருப்பதால் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது அவரது தாய் வீட்டில் இல்லை. மேலும் ரோஹித் வீட்டில் சோதனை நடத்தி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close