[X] Close

என்னைக் கொல்ல சதி நடக்கிறது; காசு கொடுத்தது யார் என்பதுகூட எனக்குத் தெரியும்: மம்தா பகீர்


some-political-parties-trying-to-get-me-assassinated

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 May, 2018 12:11 pm
  • அ+ அ-

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தன்னைக் கொலை செய்ய சதி நடப்பதாகவும் அதற்காக கூலிப்படைக்கு காசு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேற்குவங்க தொலைக்காட்சி சேனலான ஜி 24 கண்டா என்ற டிவிக்கு பேட்டியளித்த அவர், "சில அரசியல் கட்சிகள் என்னைக் கொலை செய்ய சதி நடத்திவருகின்றன. அந்தக் கட்சிகளில் பெயரை இங்கு நான் அம்பலப்படுத்த விரும்பவில்லை. ஆனால் நான் அதற்காக அஞ்சவில்லை. என்னைக் கொல்வதற்காக பணம்கூட கொடுக்கப்பட்டுவிட்டது. மாநிலத்தை நிர்வகிக்கும் எனக்கு இது தெரியாமல் இல்லை. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒருவேளை நான் கொல்லப்பட்டாலும் கூட என் கட்சி அழிந்துவிடாது. அரசியல் உயில் ஏற்கெனவே எழுதி வைத்துவிட்டேன்" என்றார்.

சிக்கலான இடத்தில் வீடு..
மம்தா பானர்ஜியின் இல்லம் கொல்கத்தாவின் ஹரிஷ் சாட்டர்ஜி சாலையில் அமைந்துள்ளது. இந்த வீட்டுக்கு அருகிலேயே ஒரு வாய்க்கால் ஓடுகிறது. மறுபுறம் குடியிருப்புப் பகுதி உள்ளது. இந்த வீட்டின் பாதுகாப்பு எப்போதுமே கொல்கத்தா போலீஸுக்கு சவால்தான்.
இந்நிலையில்,  மம்தா பானர்ஜி, தன்னைக் கொலை செய்ய சதி நடப்பதாகவும் அதற்காக கூலிப்படைக்கு காசு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இடதுசாரிகளை வீழ்த்திய தீதீ (அக்கா)

மம்தாவை மேற்குவங்க வாசிகள் பாசத்துடன் தீதீ இந்தியில் அக்கா என்ற பொருளில் அழைக்கின்றனர். கடந்த, 2011 ஏப்ரல்/மே மாதங்களில் ஆறு கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்று 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டு வந்த இடதுசாரி முன்னணி அரசை வீழ்த்தினார். 

ஜெ., செய்த தவறை செய்யவில்லை..

தமிழக அரசியலில் அதிமுக இரும்புக் கோட்டையாக இருந்தது. ஜெயலலிதாவின் காலம் வரை அந்தக் கட்சி அப்படித்தான் அறியப்பட்டது. ஆனால், அவர் மறைந்தபின்னர் நடந்த கூத்துகள் கட்சிக்குள் எத்தனை எத்தனை குழப்பங்களை ஏற்படுத்தியது, திருப்பங்களை ஏற்படுத்தியது என்பதை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. இரு அணிகள் பின்னர் மூன்று அணிகள். டிடிவி தனிக் கட்சி, தற்போது திவாகரன் தனி அணி என இன்னமும் நீண்டு கொண்டே இருக்கிறது சர்ச்சைகள். இதற்கெல்லாம், முக்கியக் காரணம் ஜெயலலிதா தான் வாழும் காலத்தில் தனது அரசியல் வாரிசு யார் என்பதை அடையாளம் காட்டாததே. எம்ஜிஆர், கடலூர் மாநாட்டில் ஜெயலலிதாவை அங்கீகரித்தார். அதனால், எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் சர்ச்சைகளின் ஊடேவாவது ஜெயலலிதாவால் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால், இன்றைய நிலவரம் அப்படியல்ல. ஜெயலலிதா இருந்தவரை இடம் தெரியாமல் இருந்த எல்லோரும் இன்று கருத்து கூற தொடங்கிவிட்டனர். கட்சி ஆட்டம் கண்டுதான் இருக்கிறது.

ஆனால், மம்தா பானர்ஜி தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். எனது அரசியல் உயில் தயாராக இருக்கிறது. நான் மறைந்தாலும் கட்சிக்கு ஒன்றும் ஆகாது எனக் கூறியிருக்கிறார். குறைந்தபட்சம் யாரோ ஒருவரை அவர் தன் மனதில் திரிணமூல் கட்சியை வழிநடத்த யோசித்து வைத்திருக்கிறார் என்ற தகவலே அதன் தொண்டர்களுக்கு உற்சாகத்தைத் தரக்கூடியதுதான்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close