[X] Close

மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் முதல் 100 நாட்களுக்கான செயல் திட்டம் தயாரிக்க மோடி உத்தரவு


100

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 09:04 am
  • அ+ அ-

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இப்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகிவிட முடியும் என நரேந்திர மோடி நம்பிக்கையுடன் உள்ளார். அவ்வாறு மீண்டும் பிரதமரானால், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தைப் போல அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையில் பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியிலான சீர்திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

அதற்கேற்ப புதிய அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை தயாரிக்குமாறு பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக் துணைத் தலைவர் மற்றும் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே.விஜயராகவன் ஆகியோருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக 3 உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் நிலையில், பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக் மற்றும் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகங்களின் உயர் அதிகாரிகள் வார இறுதி நாட்களில் செயல் திட்டம் வகுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “எண்ணெய் எரிவாயு, கனிமங்கள், உள்கட்டமைப்பு மற்றும் கல்வி ஆகிய முக்கிய துறைகளில் உள்ள நடைமுறை சிக்கல்கள் அகற்றப்பட்டு விதிமுறைகளை எளிதாக்குவதில் கவனம் செலுத்தப்படும். இதன்மூலம் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதம் வரை அதிகரிக்கும். இது 2047 வாக்கில் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுப்பதற்கான அடித்தளமாக அமையும்” என்றார்.

மற்றொரு உயர் அதிகாரி கூறும்போது, “தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சினைக்கு நதிகளை இணைப்பதன் மூலம்தான் தீர்வு காண முடியும் என பிரதமர் நம்புகிறார். மேலும் பருவமழை காலத்தில் சில ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் கடலில் வீணாகக் கலப்பதைத் தவிர்க்கவும் நதிகள் இணைப்பு திட்டம் பயன்படும் என கருதுகிறார்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close