[X] Close

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய விவிபாட் இயந்திரம் வழங்கும் ஒப்புகை சீட்டுகளுடன் 50 சதவீத வாக்குகளை சரிபார்க்க கோருவது அர்த்தமற்றது: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கருத்து


50

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 08:55 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவாகும் 50 சதவீத வாக்குகளை விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவது அர்த்தமற்றது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் எந்த வேட்பாளருக்கு வாக்குப்பதிவு செய்தோமோ, அந்த வேட்பாளருக்குத்தான் வாக்கு பதிவாகி உள்ளதா என்பதை வாக்காளருக்கு காட்டுவதற்காக விவிபாட் இயந்திரம் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் அச்சிட்ட பதிவு, வாக்காளர்களுக்கு வழங்கப்படாது. விவிபாட் பெட்டிக்குள்ளேயே அந்த சீட்டு விழுந்துவிடும்.

தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், இந்த ‘விவிபாட்’ இயந்திரங்களும் இணைக்கப்படுகின்றன.

ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியிலும் ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை, ‘விவிபாட்’ இயந்திரங்கள் உறுதிப்படுத்தும் பதிவுகளுடன் எண்ணி சரிபார்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

ஆனால் இது போதாது, அனைத்து பேரவைத் தொகுதியிலும் 50 சதவீத வாக்குகளையாவது, இப்படி ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.

அதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு சட்டப் பேரவைத் தொகுதியில் 5 வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவாகிற வாக்குகளை, ‘விவிபாட்’ எந்திரங்கள் உறுதிப்படுத்தும் பதிவுகளுடன் எண்ணி சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் திருப்தி அடையவில்லை. வரும் மக்களவைத் தேர்தலின்போது ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவாகும் 50 சதவீத வாக்குகளை விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

பதிவான வாக்குகளில் 50 சதவீத விவிபாட் பதிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுவது அர்த்தமற்றது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறுகள் வர வாய்ப்பு இல்லை. இயந்திரங்களை கையாள்வதில் வேண்டுமானால் மனிதத் தவறுகள் ஏற்படலாம். ஆனால் இயந்திரத்தில் தவறு வராது.

தற்போது கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால், தேர்தலில் தோற்கும் கட்சிகள், விவிபாட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளுடன் பதிவான வாக்குகளை 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைப்பார்கள். அப்போது என்ன செய்ய முடியும்?முடிவில்லாத விளையாட்டு100 சதவீத விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்த்த பிறகும், விவிபாட் சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் கூற வாய்ப்புள்ளது.

இது ஒரு முடிவில்லாத விளையாட்டாகி விடும். இது துரதிருஷ்டவசமானது. சட்டத்துக்கு மதிப்பு கொடுக்க எதிர்க்கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசியல் கட்சிகள் உணரவில்லையென்று நினைக்கிறேன். இவ்வாறு முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close