[X] Close

குமாரசாமி ஆட்களால் உயிருக்கு ஆபத்து: நடிகை சுமலதா குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 08:41 am
  • அ+ அ-

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் ஆதரவாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நடிகையும் மண்டியா தொகுதியின் வேட்பாளருமான சுமலதா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் மண்டியா மக்களவை தொகுதியில் காங்கிரஸ் - மஜத கூட்டணியின் வேட்பாளராக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமார் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது.

இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால் இரு தரப்பினரும் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில் மண்டியாவில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை சுமலதா கூறும்போது, "எனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த என் மகன் அபிஷேக், நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோரை மஜதவினர் மிரட்டி வருகின்றனர். குமாரசாமியின் ஆதரவாளர்களால் என் உயிருக்கும், என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருக்கிறேன். கர்நாடக போலீஸார் குமாரசாமியின் கைப்பாவையாக செயல்படுவதால், எங்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து முதல்வர் குமாரசாமி கூறும்போது, "சுமலதா தரப்பினர் அவர்களை தாக்குவதற்காக அவர்களே கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளனர். அதன் பிறகு பழியை எங்கள் மீது போட்டுவிட்டு, மக்கள் மத்தியில் அனுதாப அலையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close