[X] Close

‘‘ராம்பூரின் திரவுபதி துயிலுரியப்படுகிறார்’’ - ஜெயப்பிரதாவை விமர்சித்த ஆசம்கானுக்கு சுஷ்மா கடும் கண்டனம்


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 11:34 am
  • அ+ அ-

-ஏஎன்ஐ

"ராம்பூரின் திரவுபதி துயிலுரியப்படுகிறார், நீங்கள் பீஷ்ம பிதாமன் போல் அமைதியாக இருக்காதீர்கள் முலாயம் சிங் யாதவ்" என வேண்டுகோள் விடுத்திருகிறார் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

அவர் இப்படி ஒரு வேண்டுகோளை விடுக்கக் காரணம் பாஜகவின் ராம்பூர் வேட்பாளர் ஜெயப்பிரதாவை, அதே தொகுதியின் சமாஜ்வாதி வேட்பாளர் ஆசம் கான் விமர்சித்ததே.

என்ன சொன்னார் ஆசம்கான்?

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார் சமாஜ்வாதி கட்சயின் ஆசம்கான். அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா. இவர் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்தவர்.

ஆசம்கான், ஜெயப்பிரதா ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டிவர பிரச்சாரம் பரபரப்படைந்திருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆசம்கான் முன்வைத்த விமர்சனம் ஒன்றும் அவருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பும் அளவுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆசம்கான் மீது நடவடிக்கை உறுதி என மகளிர் ஆணையம் கொந்தளிக்கும் அளவுக்கு அவர் பேசியது இதுதான்..

"பாஜக வேட்பாளர் என் மீது சரமாரியாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ஆனால், மறைந்த எனது தாய் மீது ஆணையாகச் சொல்கிறேன் அவை ஏதும் உண்மையல்ல. என் மீதான புகார்கள் உண்மையென்றால் நான் அவற்றை ஏற்றுக்கொள்வேன். நான் ஒன்றும் கோழையுமல்ல.

அரசியலில் ஒருவர் இவ்வளவு தரம் தாழ வேண்டுமா என்பதே எனது கேள்வி. அந்த நபரை (ஜெயப்பிரதாவை) நான் தான் ராம்பூருக்கு விரல் பிடித்து அழைத்துவந்தேன். ராம்பூரின் தெருக்களில் எல்லாம் அவர் பிரபலமடையும் அளவுக்கு அவருக்காக உழைத்தேன். அவரை யாரும் அண்டவிடாமல் பார்த்துக்கொண்டேன்.

 

azam khan1.jpg

 

அவர் மீது யாரும் மோசமான வார்த்தைகளைத் தெளிக்காமல் பாதுகாத்தேன். அதனால், நீங்கள் அந்த நபருக்கு வாக்களித்து அவரை 10 ஆண்டுகளுக்கு உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் அனுப்பினீர்கள். ஆனால்,  ராம்பூர், ஷாபாத் மக்களுக்கு ஜெயப்பிரதாவை அறிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆகின’’ எனக் கூறினார். மேலும் ஜெயப்பிரதாவின் ஆடையை பற்றி மிகமோசமாக விமர்சித்தார்.

இதுதற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கண்டனங்கள் குவிந்துவருகின்றன. ஆசாம் கான் இவ்வாறு பேசியபோது அந்த பிரச்சார மேடையில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் இருந்துள்ளார். இதனை ஒட்டியே தேசிய மகளிர் ஆணையம் ஆசம் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுஷ்மா கண்டனம்..

ஆசாம்கானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், "சகோதரர் முலாயம் அவர்கள, நீங்கள் தான் சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைமை. ராம்பூரில் ஒரு திரவுபதி துயில் உரியப்படுகிறார். நீங்கள் பீஷ்ம பிதாமகனைப் போல் அமைதியாக இருந்து தவறிழைக்காதீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டில் அகிலேஷ் யாதவ், டிம்பிள் யாதவ், ஜெயாபச்சன் ஆகியோரையும் டேக் செய்திருக்கிறார்.

 

title

 

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் ஆசம்கான், நான் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டால் தேர்தலிலேயே போட்டியிடவில்லை. நான் எந்த ஒரு தனிநபரின் பெயரையும் குறிப்பிட்டுப்பேசவில்லை. அதனால் நான் எவரையும் அவமதிக்கவில்லை. நான் ராம்பூர் எம்எல்ஏவாக 9 முறை இருந்துள்ளேன். அதனால் எனக்கு எதைப்பேச வேண்டும் என்பது நன்றாகத் தெரியும் என்றார்.

ஜெயப்பிரதாவின் அரசியல் பின்னணி..

நடிகை ஜெயப்பிரதா 1994-ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். அப்போது கட்சித்தலைவராக என்.டி.ராமாராவ் இருந்தார். ஆனால், கட்சி சந்திரபாபு நாயுடுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது ஜெயப்பிரதாவுக்கு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து விலகினார். பின்னர் அவர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். 2004, 2009 என இரண்டு முறை சமாஜ்வாதி கட்சியின் ராம்பூர் எம்.பி.யாக தேர்வானார்.

ஆனால், முலாயம் சிங் யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜெயப்பிரதாவும் அமர்சிங்கும் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகினர். தற்போது 56 வயதான ஜெயப்பிரதா கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். இப்போது அவர் பாஜக வேட்பாளராக ராம்பூரில் போட்டியிடுகிறார். ஆசம் கான் தன்னை துன்புறுத்தியதாகவும் அவரிடமிருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருவதாகவும் ஜெயப்பிரதா குற்றஞ்சாட்டி வருகிறார்.

 

title

 

ஆசம்கான் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார். பலரும் அவருக்கு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close