[X] Close

‘இவிஎம்’ திருட்டு வழக்கில் கைதான ‘நிபுணருடன்’ டெல்லி சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு: திருப்பி அனுப்பியது தேர்தல் ஆணையம்


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 09:01 am
  • அ+ அ-

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைக்கும் கடந்த 11-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது ஏராளமான மின்னணு வாக்குப் பதிவு (இவிஎம்) இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப் பதிவு தடைபட்டது. அதன்பின் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு விடிய விடிய வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதையடுத்து இவிஎம் இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், பழைய ஓட்டுச் சீட்டு முறையையே அமல்படுத்த வேண்டும் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார். அத்துடன் கடந்த சனிக்கிழமை காலை தன்னுடன் நிபுணர்கள் குழுவை அழைத்துக் கொண்டு டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு புகார் மனுவை கொடுத்தார்.

அப்போது, இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடத்த முடியும் என்பதை நிரூபிக்க தன்னுடன் வந்துள்ள நிபுணர் குழுவை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு இவிஎம் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அறிய மாலை 4 மணிக்கு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் நிபுணர்கள் குழுவில் உள்ளவர்களின் பெயர்களை, தேர்தல் ஆணையத்தில் ஆந்திர மாநில அரசின் டெல்லி பிரதிநிதி சமர்ப்பித்தார்.

அதன்பின் நிபுணர் குழுவில் உள்ளவர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் உடனடியாக ஆய்வு செய்தது. அப்போது, கடந்த 2010-ம் ஆண்டு இவிஎம் இயந்திரங்களை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ஹரிபிரசாத் என்பவரின் பெயரும் நிபுணர்களின் குழுவில் இருப்பதை அறிந்து தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹரிபிரசாத். இவிஎம் இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் அல்லது ஊடுருவி தகவல்களை மாற்ற முடியும் என்று 2009-ம் ஆண்டு முதல் கூறிவருகிறார். அதை நிரூபிக்க 2010-ம் ஆண்டு வெளிநாட்டு நிபுணர் உதவியுடன் இவிஎம் இயந்திரத்தை திருடி கைது செய்யப்பட்டவர். இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் சேகரித்தது.

மாலை 4 மணிக்கு துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின், ஓய்வு பெற்ற ஐஐடி பேராசிரியர் டி.டி.சஹானி (இவர் தேர்தல் ஆணையத்தின் நிபுணர் குழுவில் உள்ளவர்.) ஆகியோருடன் ஆலோசனை நடத்த தெலுங்கு தேசம் கட்சியின் சட்டப்பிரிவினர் வந்தனர். சுதீப் ஜெயின் அலுவலகத்துக்கு வந்த அந்தக் குழுவில் ஹரிபிரசாத் இருப்பதை அறிந்து அதிகாரிகள் விவரங்களை உறுதி செய்து கொண்டனர். அதன்பின் நிபுணர்கள் குழுவில் ஹரிபிரசாத் இருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், உடனடியாக அலுவலகத்தை விட்டு அனைவரும் வெளியேறும்படி உத்தரவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக தெலுங்கு தேசம் சட்டப் பிரிவுத் தலைவருக்குத் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. அதில், ‘‘திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒருவர், முதல்வர் தலைமையிலான குழுவில் இடம்பெற எப்படி அனுமதித்தீர்கள்? ஹரிபிரசாத் போன்ற நபர்களுடன் ஆலோசனை நடத்துவது சரியானதாக இருக்காது. இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்படாதவர்கள் வேறு யாருடனும் இவிஎம் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் தயார்’’ என்று கூறியுள்ளது.

இந்த விவரங்கள் டெல்லியில் உள்ள ஆந்திர மாநில அரசு பிரதிநிதிக்கும் தெரிவிக்கப்பட்டது.

‘இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்கலாம்’ என்று கூறி ஒரு கூட்டத்தை தேர்தல் ஆணையம் கடந்த 2009-ம் ஆண்டு ஏற்பாடு செய்தது. அந்தக் கூட்டத்தில் ஹரிபிரசாத் பங்கேற்று, இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு செய்யவும், அதில் ஊடுருவி தகவல்களை மாற்றவும் முயற்சித்தார். எனினும் அதை நிரூபிக்க முடியாமல் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close