[X] Close

சபரிமலை விவகாரத்தில் வழக்குப் பதிவு: கேரள தலைமை செயலகம் முன்பு இந்து அமைப்பினர் போராட்டம்


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 08:15 am
  • அ+ அ-

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை அமல்படுத்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதசாரி முன்னணி அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் கேரளாவில் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், போராட்டம் நடத்தியவர்கள் மீது மாநில அரசு பல்வேறு வழக்குகளை சட்டவிரோதமாகப் பதிவு செய்துள்ளது என்று கூறி ‘சபரிமலை கர்ம சமிதி’ அமைப்பை சேர்ந்தவர்கள், திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தின் முன்பு திடீரென போராட்டம் நடத்தினர். இந்த அமைப்பை சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் ஏராளமானோர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

போராட்டம் நடந்த இடத்தில் ஐயப்பன் உருவப் படத்தை வைத்து, சாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

கேரளாவில் மக்களவைத் தேர்தல் வரும் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், சபரிமலை தொடர்பாக இந்து அமைப்பினர் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

கூட்டத்தினர் முன்னிலையில், கொளத்தூர் அத்வைத ஆஸ்ரம தலைவர் சுவாமி சிதானந்தபுரி கூறும்போது, ‘‘சபரிமலை போராட்டத்தின் போது, பக்தர்கள் மீது போலீஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதை இந்துக்கள் யாரும் மறக்க வேண்டாம்’’ என்று கேட்டுக் கொண்டார்.- பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close