[X] Close

தினம் ஒரு பொய்யுடன் வரும் எதிர்க்கட்சிகள்; முதுகலை இல்லாமல் எம்.பில். பட்டம் பெற்றவர் ராகுல்- ‘பேஸ்புக்’கில் அருண் ஜேட்லி சரமாரி கேள்வி


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 08:17 am
  • அ+ அ-

-பி.டி.ஐ,

‘‘மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப் பதிவின் போது நாடு முழுவதும் பிரதமர் மோடி அலை வீசியதை காண முடிந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதுகலை பட்டம் பெறாமலேயே எம்.பில் பட்டம் பெற்றுள்ளார்’’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

உ.பி. அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிபோட்டியிடுகிறார். அவர் தனது கல்வித் தகுதியை மறைத்து பொய்கூறியிருக்கிறார் என்று காங்கிரஸார் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:நாடு முழுவதும் கடந்த வியாழக்கிழமை 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 91 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி அலை வீசியதை காண முடிந்தது. பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பொருந்தா கூட்டணி வைத்துள்ளன. அது பாஜக.வுக்கு சாதகமாக இருப்பதை முதல்கட்ட தேர்தலில் பார்க்க முடிந்தது.

இடதுசாரி, திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை கூறிக் கொள்கின்றனர். குறிப்பாக ராகுல் காந்தி மீது மம்தாவும் மாயாவதியும் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் முகாமில் உண்மையில் தலைவரும் இல்லை, மெகா கூட்டணியும் இல்லை, பொது குறைந்தபட்ச செயல்திட்டமும் இல்லை, மத்திய அரசு மீது புகார் கூறுவதற்கு அவர்களிடம் உண்மையான பிரச்சினைகளும் இல்லை.

அனைவராலும் அறியப்பட்ட ஒரு சிறந்த அரசை, மிகவும் பிரபலமான பிரதமர் ஒருவரை பதவியில் இருந்து அனுப்ப வேண்டுமானால், உண்மையான பிரச்சினைகள் தேவை. கற்பனையான பிரச்சினைகள் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக தேர்தல் பணிகளைத் தொடங்குவதில் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்துவிட்டன. அதனால், ரஃபேல் ஊழல் என்றும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்றும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி என்பது பொய், மின்னணு வாக்குப் பதிவு முறைகேடு என்பது அதைவிட மிகப்பெரிய பொய். எதிர்க்கட்சிகள் தினம் தினம் ஒவ்வொரு பொய்யுடன் வருகின்றனர். ஒரு நாள் புல்வாமா தாக்குதல் குறித்து கேள்வி கேட்கின்றனர். மறுநாள் பாலகோட் தாக்குதலில் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

பாஜக வேட்பாளரின் (ஸ்மிருதி இரானி) கல்வித் தகுதியில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், ராகுல் காந்தியின் கல்வித் தகுதியைப் பற்றி யாரும் பேசுவதில்லை. முதுகலை பட்டம் பெறாமலேயே அவர் எம்.பில். பட்டம் பெற்றுள்ளார். இதற்கு அவர்கள் நிறைய பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

இவ்வாறு அருண் ஜேட்லி கூறியிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close