[X] Close

யார் உங்கள் தலைவர் என்பதை கூற முடியுமா?- எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா கேள்வி


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 08:10 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

உத்தரபிரதேச மாநிலம் பதாயூன் நகரில் நேற்று நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது:

தீவிரவாதிகள் மீது காங்கிரஸ் கட்சி பரிவு காட்டி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குரு சாம் பிட்ரோடா, பாகிஸ்தான் மீது குண்டு வீச வேண்டாம். பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்கிறார். ராகுல் காந்தி அவர்களே. நீங்கள் வேண்டுமானால் தீவிரவாதிகளுடன் காதல் புரியுங்கள்.

ஆனால் எங்கள் எண்ணம் தெளிவாக இருக்கிறது. அவர்கள் குண்டு வீசினால், அதற்கு மற்றொரு குண்டு மூலம் பதிலடி கொடுப்போம்.

பாஜகவுக்கு முன்பு தொடர்ந்து 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீவிரவாதிகள், நமது இந்திய ராணுவ வீரர்களின் தலையை வெட்டியபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபோது, நாங்கள் மவுன சாமியார் மன்மோகன் சிங் போல மவுனமாக இருக்கவில்லை. புல்வாமா தாக்குதல் நடத்திய 13 நாட்களில் பாலகோட் தாக்குதல் மூலம் தக்க பதிலடி கொடுத்தோம்.

நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பிரதமராக மோடி இருக்கிறார். ஆனால் மெகா கூட்டணியில் ராகுல் காந்தி, மாயாவதி, அகிலேஷ் உள்ளிட்ட தலைவர்கள் இருக்கின்றனர். இந்த கூட்டணியின் தலைவர் யார் என்று நான் கேட்கிறேன்.

எங்களுடைய பிரதமர் வேட்பாளர் மோடி என்று நாங்கள் தெளிவாக அறிவித்துவிட்டோம். அதேபோல உங்கள் தலைவர் யார் என்பதை நீங்கள் அறிவியுங்கள் என்று கேட்கிறேன்.

ஆனால் யாரும் சொல்லவில்லை. அதற்கு நான் பதில் சொல்கிறேன். திங்கள்கிழமை மம்தா பானர்ஜி, செவ்வாய்க்கிழமை மாயாவதி, புதன்கிழமை சந்திரபாபு நாயுடு, வியாழக்கிழமை தேவகவுடா, வெள்ளி, சனிக்கிழமைகளில் முலாயம் சிங் யாதவ் என தலைவர்கள் மாறுவார்கள்.

இப்படி ஒரு அரசு நடக்க முடியுமா? நாட்டின் பாதுகாப்பை யார் கவனிப்பார்கள்? நாட்டின் பாதுகாப்புக்கு இந்த மெகா கூட்டணி உத்தரவாதம் அளிக்குமா? எனவே பாஜக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close