[X] Close

என்னுடன் விவாதித்த விவரங்களை வெளியிட துணிச்சல் இருக்கிறதா?- லாலுவுக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 08:08 am
  • அ+ அ-

நிதி முறைகேடு வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அண்மையில் தமது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டிருந்தார்.

அதில் ஒரு பகுதியில், முதல்வர் நிதீஷ் குமாரின் தூதுவராக ஐக்கிய ஜனதா தள துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் தம்மை சமீபத்தில் சந்தித்து பேசியதாக லாலு தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த சந்திப்பின்போது, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது, பிஹார் அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதுடன், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கு இடையேயும் நெருடலை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக, லாலுவின் மனைவி ராப்ரி தேவியும் நேற்று முன்தினம் பேட்டியளித்திருந்தார். அதில், லாலு தமது புத்தகத்தில் தெரிவித்தது அனைத்தும் உண்மை என அவர் கூறினார்.

தர்மசங்கடமாகிவிடும்...

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் நேற்று தமது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:லாலுவும், அவரது மனைவி ராப்ரி தேவியும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும், அதன் தலைவர் நிதிஷ் குமாருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர். லாலுவையும், ராப்ரி தேவியையும் நான் சந்தித்து பேசியது உண்மைதான். ஆனால், அவர்கள் கூறிய விஷயங்கள் குறித்து நான் பேசவே இல்லை. பொதுவான அரசியல் நிலவரங்கள் குறித்தே விவாதித்தோம்.

இந்த சந்திப்பின்போது, என்னிடம் லாலு பிரசாத் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தினார். அவற்றையெல்லாம் நான் வெளியே கூறினால் அவருக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும். என்னுடன் விவாதித்த விஷயங்களை வெளியே கூற லாலுவுக்கு துணிச்சல் இருக்கிறதா? இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close