[X] Close

காய்கறி வியாபாரி தற்கொலை: காரணம் மின் கட்டண ஷாக்


aurangabad-vegetable-seller-ends-life-after-receiving-electricity-bill-for-rs-8-65-lakh

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 May, 2018 09:53 am
  • அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலத்தில் காய்கறி வியாபாரி ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ளக் காரணமாக இருந்துள்ளது மின்சார கட்டணம்.

ஆம், மகாராஷ்டிரா மாநில மின் வாரியம் அனுப்பிய பில்லில், அந்த வியாபாரி ஏப்ரல் மாதத்துக்கான மின் கட்டணமாக ரூ.8 லட்சத்து 65 ஆயிரத்து 20 கட்ட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான காய்கறி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸார், "ஜெகன்நாத் நேஹாஜி ஷேல்கே என்பவர் பரத்நகரில் வசிக்கிறார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அண்மையில் இவர் தனது வீட்டின் மின் மீட்டரை மாற்றியிருக்கிறார். அதன்பின் வந்த முதல் மின்சார ரசீதில் அவர் கட்ட வேண்டிய தொகை ரூ.8,65,020 எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுவும் வரும் 17-ம் தேதிக்குள் (மே 17) கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இதனையடுத்து அவர், மகாராஷ்டிரா மாநில மின் வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து புகாரும் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரது புகாரை கண்டுகொள்ளாத நிர்வாகம் பில்லில் இருக்கும் தொகையைக் கட்டுமாறு கூறியிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஷேல்கே வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

தனது உடலில் ஒரு தற்கொலைக் குறிப்பை அவர் எழுதி வைத்திருந்தார். அதில், "மின் கட்டணம் தந்த அதிர்ச்சியால் தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்" என எழுதி வைத்துள்ளார்" எனத் தெரிவித்தனர்.

ஷேல்கேவின் உறவினர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், அவுரங்காபாத்தில் உள்ள மாநில மின் வாரியமோ, மின் கட்டணத்தைக் கணக்கிட்ட பணியாளர் அதைத் தவறாகக் கணக்கிட்டதாகக் கூறினர். இதனையடுத்து சுனில் கோலி என்ற அந்த நபர் பணியில் அலட்சியம் காட்டியதற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close