[X] Close

காஷ்மீர்: வேலைநிறுத்தத்தால் இயல்புவாழ்க்கை பாதிப்பு; பாரமுல்லா தொகுதியில் முதல்கட்ட தேர்தலில் பிரச்சினையில்லை...


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 13:22 pm
  • அ+ அ-

-பிடிஐ

காஷ்மீரில் முதல்கட்ட தேர்தலை எதிர்த்து பிரிவினைவாதிகள் வேலைநிறுத்தத்திற்கு இன்று அழைப்புவிடுத்துள்ளதை அடுத்து, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தேர்தலின்போது அங்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து உயரதிகாரிகள் சிலர் தெரிவித்த தகவல்கள்:

பாரமுல்லா நாடாளுமன்றத் தொகுதியில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும், மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று பிரிவினைவாதிகள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

வேலைநிறுத்தத்தையொட்டி காஷ்மீரில் இன்று கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. அரசு, தனியார் அலுவலகங்களில் ஊழியர்களின் வருகைப்பதிவு மிகவும் குறைவான அளவிலேயே உள்ளன.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளின் சாலைகளில் அரசுப் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் நகரங்களில் சில தனியார் வாகனங்கள் செல்வதைக் காணமுடிகிறது''

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரின் பிரதான நெடுஞ்சாலைகள் வாரத்திற்கு இரண்டுநாட்கள் மூடிவைக்க எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் பிரிவினைவாதத் தலைவர்களின் தரப்பு தெரிவிக்கிறது.

மேலும் ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறைச்சாலை கைதிகளை போலீஸும் துணை ராணுவப் படையினரும் கடுமையாக தாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதன்காரணமாகவே இத்தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் தாங்கள் அழைப்புவிடுத்துள்ளதாகவும் பிரிவினைவாதிகள் தரப்பு தெரிவிக்கிறது.

எனினும் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் எப்பிரச்சினையும் எழவில்லை என்றும் பள்ளத்தாக்கில் அமைதியான சூழ்நிலை நிலவுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று தேர்தல் நடைபெறும் பாரமுல்லா தொகுதியில் 13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close