[X] Close

புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள்: ராகுல் காந்தி; அதிகளவில் வாக்களித்து சாதனை படையுங்கள்-பிரதமர் மோடி


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 11:28 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

தேசத்தின் நலனுக்காக, எதிர்காலத்துக்காக புத்திசாலித்தனமாக வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

543தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக இன்று முதல் தொடங்குகிறது. முதல் கட்டமாக 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் 25 தொகுதிகள், அருணாசலப் பிரதேசம் (2), அசாம் மாநிலத்தில் 5 தொகுதிகள், பிஹாரில் 4 தொகுதிகள், சத்தீஸ்கரில் ஒரு தொகுதி, ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகள், மணிப்பூர், மிஸோரம், திரிபுரா, நாகாலாந்து, அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி, மேகலாயாவில் 2 தொகுதிகள், ஒடிசாவில் 4 தொகுதிகள், உத்தப்பிரதேசத்தில் 8 தொகுதிகள், உத்தரகாண்டில் 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகள் என  18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த முதல்கட்டத் தேர்தலில் 14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், " பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் முன் 2 கோடி வேலைவாய்ப்புகள் , 15 லட்சம் வங்கியில் டெபாசிட், நல்ல காலம் பிறக்கும் என்று வாக்குறுதி அளித்தார். அதற்கு பதிலாக வேலையின்மையும், பணமதிப்பிழப்பும், விவசாயிகள் வேதனையும், கப்பார் சிங் டேக்ஸ்(ஜிஎஸ்டி), சூட்பூட் சர்கார்(பணக்காரர்களுக்கான அரசு), ரஃபேல் ஊழல், பொய்கள், வன்முறை, வேதனை, அச்சம் ஆகியவைதான் கிடைத்தது.

வாக்காளர்களே, இன்று நீங்கள் தேசத்தின் எதிர்கால நலனுக்காக, புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள் " எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் கூறுகையில், " ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா இன்று தொடங்கியுள்ளது. புதிய தந்திரங்களில் ஏதும் தேசம் சிக்காது, வளர்ச்சியின் பாதையை பின்தொடர்கிறது. தேசத்தை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும். பொய்களில் இருந்தும், ஏமாற்றுத்தினத்தில் இருந்தும், வெற்று வாக்குறுதியிலிருந்தும் தேசத்தை பாதுகாத்து, அன்பு, அமைதி, மற்றும் சகோதரத்துவத்துடன் கூடிய வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல வேண்டும். நீதி கிடைப்பதற்காக நீங்கள் வாக்களியுங்கள் " எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் கூறுகையில், " முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் அதிக அளவில் முன்வந்து தங்களின் வேட்பாளர்களாக வாக்களித்து சாதனை படைக்க வேண்டும். குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் " எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close