[X] Close

யாசின் மாலிக்கை ஏப்ரல் 22 வரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி


22

  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 08:38 am
  • அ+ அ-

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக்கை வரும் 22-ம் தேதி வரை என்ஐஏ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

1967-ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் ஜேகேஎல்எப் தடை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு ஜம்முவில் உள்ள கோட் பல்வால் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தீவிரவாத செயல்களுக்கு நிதி அளிக்கப்பட்ட வழக்கில் யாசின் மாலிக் நேற்று முன்தினம் டெல்லி கொண்டு வரப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் நேற்று டெல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ராகேஷ் சியால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, அங்கு கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து வரும் 22-ம் தேதி வரை என்ஐஏ காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசுவது, பள்ளிகளுக்கு தீவைப்பது, அரசு அலுவலகங்களை சேதப்படுவது போன்ற வன்முறைச் செயல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் வெளியில் இருந்து நிதி பெறப்படுகிறது. இதற்கு பின்னணியில் இருந்து செயல்படுபவர்களை அடையாளம் காண என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 1989-ல் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகம்மது சயீதின் மகள் ரூபையா சயீது கடத்தப்பட்டார். 1990-ல் இந்திய விமானப் வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாகவும் யாசின் மாலிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க, ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் அனுமதியை சிபிஐ கோரியுள்ளது. இதில் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close