[X] Close

காலையும் மாலையும் ‘மேக் அப்’ செய்து வெள்ளையாக இருப்பதால் மோடிக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன: கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆதங்கம்


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 08:37 am
  • அ+ அ-

-இரா.வினோத்

பெங்களூரு வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிருஷ்ண பைரே கவுடாவை ஆதரித்து அம்மாநில முதல்வர் குமாரசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது குமாரசாமி பேசியதாவது:

பாஜகவினர் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை சொல்லி வாக்கு சேகரிக்காமல், மோடியின் பெயரை சொல்லி வாக்கு கேட்கிறார்கள். மோடியை பாருங்கள் கம்பீரமாக இருக்கிறார். அவரது முகத்தைப் பாருங்கள் வெள்ளையாக இருக்கிறார் என சொல்லி வாக்கு கேட்கிறார்கள்.

மோடி தினமும் காலையும் மாலையும் குளித்து நன்றாக ‘மேக் அப்’ போட்டுக் கொள்கிறார். அவ்வப்போது பவுடர் பூசிக்கொள்கிறார். போதாக்குறைக்கு ‘மேக் அப்’ ஆர்ட்டிஸ்ட் மூலம் வேக்ஸ் செய்து, க்ரீம் பூசிக் கொள்கிறார். அதனால் அவர் முகம் எப்போதும் பளிச்சென வெள்ளையாக இருக்கிறது. இதைப் பார்த்தே ஊடகங்கள் அவருக்கு பின்னால் ‘மோடி மோடி’ என ஓடுகின்றன.

ஆனால் நான் இன்று காலை குளித்தால், மறுநாள் காலைதான் மீண்டும் குளிக்கிறேன். அதனால் என் முகம் சோர்வாக தெரிகிறது. எனவே ஊடகங்கள் என்னைத் தேடி வருவதில்லை. இவ்வாறு குமாரசாமி ஆதங்கத்தோடு குறிப்பிட்டார். குமாரசாமியின் மேக் அப்!குமாரசாமி அரசியலுக்கு வருவதற்கு முன்னர் பிரம்மாண்டமாக படம் எடுக்கும் தயாரிப்பாளராக வலம் வந்தார். அவரது சென்னம்பிகா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் அவ்வப்போது மேக் அப் போட்டு, ஒரு சில காட்சிகளில் தலையை காட்டியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் கஸ்தூரி என்ற பெயரில் சேனல் தொடங்கிய அவர், தொலைக்காட்சி மெகா தொடர்களையும் தயாரித்து வந்தார். தற்போது சென்னம்பிகா பட நிறுவனத்தையும், கஸ்தூரி சேனலையும் குமாரசாமியின் மனைவி அனிதா நிர்வகித்து வருகிறார்.

இதேபோல குமாரசாமியின் துணைவி நடிகை குட்டி ராதிகா கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது குமாரசாமியின் ஒத்துழைப்பில் குட்டி ராதிகா திரைப்படத் தயாரிப்பில் அக்கறை காட்டி வருகிறார்.

மக்களவைத் தேர்தலில் மண்டியாவில் களமிறங்கியுள்ள குமாரசாமியின் மகன் நிகில் குமார் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மண்டியா மக்களை ஈர்க்கும் வகையில் திரைப்படங்களில் வருவதைப் போலவே நன்றாக ‘மேக் அப்’ போட்டுக்கொண்டு, பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு ‘மேக் அப்’ விஷயத்தில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close