[X] Close

தெலங்கானாவில் நாளை மக்களவைத் தேர்தல்: ஆட்சியை முடிவு செய்யும் ‘கிங் மேக்கர்’ சந்திரசேகர் ராவ்?


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 20:05 pm
  • அ+ அ-

முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறும் மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று. மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அடுத்த பிரதமரை முடிவு செய்யும் முக்கிய நபராக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இருப்பார் என கருதப்படுகிறது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து 2014-ம் ஆண்டு தனியாக பிரிந்து தெலங்கானா மாநிலம் உருவானது. தெலங்கானா மாநிலம் உருவாக பெரும் போராட்டம் நடத்தி வென்றி கண்ட தெலங்கானா ராஷ்டிர சமிதியும், அதன் தலைவர் சந்திரசேகர் ராவும் இந்த மாநிலத்தை பொறுத்தவரை அசைக்க முடியாத சக்திகள்.

வரும் மக்களவை தேர்தலுடன் சேர்ந்து தான், மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முன்கூட்டியே  சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து மீண்டும் பெரும் வெற்றி பெற்று முதல்வராக பதவியில் அமர்ந்துள்ளார் சந்திரசேகர் ராவ்.

தெலங்கானா ராஷ்டிர சமிதியை வீழ்த்த காங்கிரஸுடன் கரம் கோர்த்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் முயற்சி சட்டப்பேரவைத் தேர்தலில் பலன் அளிக்கவில்லை. தனித்து போட்டியிட்ட பாஜகவும் தோல்வியை சந்தித்தது. சந்திரசேகர் ராவின் ஆளுமை இந்த தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே கருதப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனியாகவே களம் இறங்கியுள்ளன. மாநிலத்தில் மொத்தமுள்ள 17 இடங்களில் அதிகமான தொகுதிகளை தெலங்கானா ராஷ்டிர சமதி கைபற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் போனால், அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் முக்கிய நபர்களில் சந்திரசேகர் ராவும் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வாக்குப்பதிவையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 17 தொகுதிகளில் மொத்தம் 443 பேர் போட்டியிடுகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close