[X] Close

ஆந்திராவில் நாளை தேர்தல்: வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு புறப்பட்டவர்களுக்கு சுங்கச்சாவடிகளில் ‘சிறை’


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 16:13 pm
  • அ+ அ-

ஆந்திராவில் நாளை தேர்தல் நடைபெறும் நிலையில் சொந்த ஊர்களுக்கு வாக்களிப்பதற்காக ஒருநாள் முன்கூட்டியே கார்களில் ஏராளமானார் புறப்பட்டுச் சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.   

நாடுமுழுவதும் நாளை முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. இங்கு மக்களவை தேர்தலுடன் சேர்ந்து மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறகிறது. 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 இடங்களை கொண்ட மாநில சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது.

ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களும் வாக்களிக்க ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். வாக்குப்பதிவையொட்டி நாளை அம்மாநிலத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்கப்பளிப்பதற்காக அமராவதி, விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு இன்று காலை முதல் புறப்பட்டுச் சென்ற வண்ணம் உள்ளனர்.

ஆயிக்கணக்கான கார்களில் மக்கள் செல்வதால் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நூற்றுக்கணக்கில் வாகனங்கள் குவிந்துள்ளன. ஒரு சுங்கச்சாவடியை கடந்து கார்கள் செல்ல பல மணிநேரம் ஆகும் சூழல் உள்ளது.

ஹைதராபாத் - விஜயவாடா நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. மிர்யாலகுடா சுங்கச்சாவடியில் இன்று நண்பகல் முதலே நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது மக்கள் எளிதில் வாக்களிக்க செல்ல ஏதுவாக சுங்கச்சாவடிகளில் கட்ட விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் சுங்கச்சாவடிகளில் நிறுத்தாமல் வாகனங்கள் நேரடியாக செல்ல முடிந்தது. ஆனால் ஆந்திராவில் தேர்தலில் அத்தகைய விலக்கு அளிக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close