[X] Close
 

ஹை ஹீல்ஸ் விபரீதம்: தாயின் கையிலிருந்து தவறிவிழுந்து குழந்தை பலி


six-month-old-baby-dies-after-his-mother-loses-her-balance-in-her-high-heels

  • kamadenu
  • Posted: 08 May, 2018 11:15 am
  • அ+ அ-

மும்பையில் ஹை ஹீல்ஸ் அணிந்திருந்த பெண் தடுக்கி விழுந்ததில் அவரது கையிலிருந்த தவறிவிழுந்த 6 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

மும்பையின் கல்யாண் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஃபெமிதா ஷேக் என்ற இளம் பெண் தனது கைக்குழந்தையுடன் சென்றிருந்தார்.

அவர் மிக உயரமான ஹீல்ஸ் அணிந்திருந்த நிலையில், நடக்கும்போது தடுக்கி விழுந்துள்ளார். அப்போது, ஹீல்ஸ் செருப்பு தடுக்கி நிலை தடுமாறி அவர் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். ஃபெமிதாவிற்கு தலையில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த 6 மாத குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இருவரையும் மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், விபத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.


ஹை ஹீல்ஸ் ஏன் அணியக் கூடாது..
ஹை ஹீல்ஸ் அணியும் இளம்பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்கிறது இந்த எச்சரிக்கை ரிப்போர்ட். ஏனெனில் ஹை ஹீல்ஸ் அணிவதால் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம். அதுவும் குறிப்பாக கர்பப்பை சார்ந்த கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறது.

நீங்கள் அணியும் ஹீல்ஸின் உயரம் 5 அங்குலத்துக்கு மேல் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 5 அங்குலத்துக்கு மேலான ஹீல்ஸ் உங்களின் தோற்றப்பாங்கில் மாறுதல் ஏற்படுவதோடு கருத்தரிப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும்.

அதேபோல், பூப்பெய்தும் பெண் குழந்தைகள் இவ்வளவு உயரமான ஹீல்ஸ் அணிவார்களானால் அவர்களுக்கும் தோற்றப்பாங்கில் மாறுதல் ஏற்படுவதோடு மாதவிடாயின்போது கடுமையான வயிற்று வலி ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
ஐவிஎஃப் எனப்படும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் சாகரிகா அகர்வால் பேசும்போது, "இளம் பெண்கள், பூப்பெய்த பருவப் பெண்கள் ஹீல்ஸ் அணிவதால் தோற்றப்பாங்கு மாறும். அவர்கள் கூண் போடும் வாய்ப்பு ஏற்படும். அத்துடன் பெல்விக் கேவிட்டியில் பாதிப்பு ஏற்படும். கர்பப்பை இயல்பாக இருக்க வேண்டிய இடத்திலிருந்து விலகக்கூடும். அதன் நீள்வெட்டு குறுக்கெட்டு தோற்றம் மாறும். இதனால், அதிக உதிரப்போக்கும், மாதவிடாயின்போது அதிக வலி ஏற்படும். திருமணமான பெண் என்றால் தாம்பத்ய உறவு கொள்ளும்போது அதிகளவில் வயிற்று வலி ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது" என்றார்.

சென்னையைச் சேர்ந்த மகளிர் நோய் சிகிச்சை நிபுணர் அர்ச்சனா எஸ் அய்யநாதன் கூறும்போது, "எப்போதுமே ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு மகப்பேறின்போது சிக்கல் ஏற்படும். அவர்களுக்கு பிரசவ வலி மிகவும் அதிகமாக இருக்கும். முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்படுவதுடன். கர்பப்பை சார்ந்த பல்வேறு கோளாறுகள் ஏற்படும்" என எச்சரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close