[X] Close
 

காதலர்களுக்கு உதவுவதற்காக அறக்கட்டளை; காதலித்து கொலையுண்ட மகனின் பெற்றோர் முடிவு


after-son-s-murder-father-plans-to-help-interfaith-couples

  • kamadenu
  • Posted: 02 May, 2018 16:14 pm
  • அ+ அ-

அங்கித் சக்சேனா. இவரை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். டெல்லியைச் சேர்ந்த அங்கித் சக்சேனா (23) இந்து மதத்தைச் சேர்ந்தவர். புகைப்படக் கலைஞர். இவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்த காரணத்தாலேயே, அந்தப் பெண்ணின் குடும்பத்தாரால் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக, அந்தப் பெண்ணின் தந்தை, மாமா, தாய் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அந்தப் பெண்ணும் அங்கித் சக்சேனாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அங்கித் சக்சேனாவின் கொலைக்கு எதிராக அப்போது சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது கூட, அங்கித் சக்சேனாவின் தந்தை யாஷ்பால் சக்சேனா அனைவரையும் அமைதி காக்கும்படியும் நல்லிணக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். தன் மகனை இழந்த சோகத்திலும், அதனால் வேறு எந்தக் கலவரங்களும், பிரச்சினைகளும் உருவாகி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

தன் மகனின் கொலைத் துயரம் நிகழ்ந்து 3 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அன்பு மகனின் இழப்பிலிருந்து தந்தை யாஷ்பால் சக்சேனாவும், தாய் கம்லேஷும் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்தநிலையில், அங்கித்தின் மரணத்திற்குப் பிறகு முதல்முறையாக அவரது பெற்றோர் மார்க்கெட்டுக்குச் சென்றபோது அங்குள்ள அனைவரும் மகனின் கொலைச் சம்பவம் குறித்து கேட்டறிந்து, தங்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். "பலரும் எங்கள் மீது அனுதாபத்தைக் காட்டுகின்றனர். எங்களைப் பார்க்கும் அனைவரும் எங்களிடம் பேச வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், எப்படி அவற்றை எதிர்கொள்வது என எங்களுக்குத் தெரியவில்லை", என்கிறார் யாஷ்பால் சக்சேனா.

ஆனால், தன் மகனை இழந்த சோகத்திலேயே மூழ்கிவிடாமல், தங்களால் இயன்ற அளவுக்கு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த, தற்போது அவர்கள் செய்துகொண்டிருக்கும் செயலானது எல்லோரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதாவது, வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் காதலித்து, அதற்கு அவர்களுடைய பெற்றோர்களும் உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த காதலர்களுக்கு உதவுவதற்காகவும், அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கவும் அறக்கட்டளை ஒன்றை துவங்க உள்ளனர்.

"அங்கித் சக்சேனா பெயரில் அறக்கட்டளை ஆரம்பிக்கத் திட்டமிட்டு வருகிறோம். அமைதியை நோக்கித் தான் இந்த அறக்கட்டளையின் பணிகள் அமையும். வேறொரு மதம், ஜாதியைக் கடந்து திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த அறக்கட்டளை உதவும்” என்கிறார் யாஷ்பால் சக்சேனா.

அதுமட்டுமல்ல, அங்கித் சக்சேனா பயன்படுத்தி வந்த ‘அவாரா பாய்’ (Awaara Boy) என்ற யுடியூப் பக்கத்தை புதுப்பிக்கவும் யாஷ்பால் திட்டமிட்டுள்ளார். ஆனால், அதனை எப்படி செயல்படுத்தவேண்டும் என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அங்கித் நண்பர்களிடம் அந்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, யுடியூப் பக்கத்தைப் புதுப்பிப்போம்” என்று கூறுகிறார்.

தன் மகனைக் கொன்றவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வேண்டும் என்பது தான் இவர்களின் ஒரே எண்ணம். அதுவே அவர்களுக்குக் கிடைக்கிற சிறிய ஆறுதல். ஆனால், தங்கள் தரப்பில் வாதாட இன்னும் ஒரு வழக்கறிஞர் கூட இவர்களுக்குக் கிடைக்கவில்லை. “எங்கள் தரப்பில் வாதாட வழக்கறிஞரை ஏற்பாடு செய்து தருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்தார். இதுதொடர்பாக என்னை வைத்துக்கொண்டே, செல்போனில் யாரோ ஒருவரிடம் அவர் பேசினார். ஆனால், இதுவரை இதுகுறித்து எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை", என யாஷ்பால் தெரிவிக்கிறார்.

இதனிடையே அங்கித் காதலித்த பெண்ணின் உறவினர்கள் அவமானம் தாங்க முடியாமல் வேறொரு இடத்திற்குச் சென்றுவிட்டனர். அந்தப் பெண் எங்கே இருக்கிறார் என்பது குறித்த தகவல்களை காவல் துறையினர் ரகசியமாக வைத்துள்ளனர். எனினும், அந்தப் பெண் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். அப்பெண்ணின் உறவினரின் மகள்கள் இருவர், அங்கித் சக்சேனாவின் பெற்றோர் வசிக்கும் அதே பகுதியில் தான் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றனர். தங்களின் தொழிலுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்காமல், மத ரீதியாக கலவரங்கள் எதுவும் செய்யாமல் இருப்பதாக அங்கித்தின் பெற்றோர் குறித்து நன்றியுணர்வுடன் தெரிவிக்கின்றனர். ’பயமோ, கவலையோ, எந்தச் சமயத்திலாவது ஏதாவது நடந்துவிடுமோ என்கிற பதட்டமே இல்லாமல் நாங்கள், அந்தப் பகுதியில் எங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

 
 
Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close