[X] Close

பெயரை மாற்றும் பாஜக தலைவர்கள்: பிரதமர் மோடியின் நானும் காவலாளிதான் டிரன்டாகிறது


chowkidar-narendra-modi-pm-adds-prefix-on-twitter-top-leaders-follow

  • போத்திராஜ்
  • Posted: 17 Mar, 2019 13:24 pm
  • அ+ அ-

புதுடெல்லி, பிடிஐ

நானும்கூட காவலாளிதான் என்று பிரதமர் மோடியின் வாசகம் இன்று பாஜக தலைவர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. இந்த வார்த்தையை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திவரும் பாஜக தலைவர்கள் ட்விட்டரிலும் தங்கள் பெயரை மாற்றத் தொடங்கியுள்ளனர்.

டிவிட்டரில் பிரதமர் மோடி சவுகிதார் நரேந்திர மோடி(சவுகிதார்-காவலாளி) என்றும் மாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, ஹர்ஸவர்த்தன், தர்மேந்திர பிரதான் ஆகியோர் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார் என்ற பெயரைச் சேர்த்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நரேந்திர மோடி, நாட்டில் யாரும் ஊழல் செய்ய விடமாட்டேன், நானும் ஊழல் செய்யமாட்டேன். தேசத்தின் காவலாளியாக இருப்பேன் என்று பேசியிருந்தார். ஆனால், ரஃபேல் போர் ஒப்பந்த ஊழல் குறித்த பேச்சின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காவலாளி ஒரு திருடன் என்று மோடியை மறைமுகமாகக் குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டை பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், ராகுல் காந்தி அடிக்கடி கூறிவரும் காவலாளி ஒரு திருடன் எனும் வார்த்தைக்குப் பதிலடி தரும் வகையில் இன்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, தான் மட்டும் காவலாளி அல்ல, மக்கள் அனைவரும் காவலாளிகள்தான் என்று காவலாளி என்ற வார்த்தையை பொதுமைப்படுத்திவிட்டார். 

பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட்டில், "உங்களுடைய காவலாளிக்கு ஆதரவாகவும், தேசத்துக்குச் சேவை செய்யும் துணையாகவும் இருங்கள். நான் தனியாக இல்லை. ஊழலுக்கும், தேசத்தில் சமூகக் கொடுமைக்கும் எதிராகப் போராடும் ஒவ்வொருவரும் காவலாளிதான். ஆதலால், காவலாளியாகிய நான் தனியாக இல்லை. தேசத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளிதான். இன்று ஒவ்வொரு இந்தியரும் நானும்கூட காவலாளிதான் என்று கூறுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் கூறுகையில் " நம்முடைய நாட்டின் காவலாளிகள், பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொண்டு, ஊழலில்லாத பொருளாதாரத்தை கொண்டுவர கடமைப்பட்டுள்ளோம். கடந்த ஆண்டுகளில் ஊழலும்,கறுப்புப்பணமும் நம்மை பாதித்துவிட்டது. இதை ஒழித்து எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். #மேன்பிசவுகிதார், #சவுகிதார்பிர்சே என்று ஹேஸ்டேக்குகளையும் பதிவிட்டுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், " நடைமுறை வாழ்க்கையிலும், ஒழுக்கத்திலும் யார் ஒருவர் கறைபடியாமல் இருக்கிறாரோ அவரே காவலாளி. அனைவரும் மனதளவில் காவலாளியாக இருப்போம் " எனத் தெரிவித்து #மேன்பிசவுகிதார், #சவுகிதார்பிர்சே என்று ஹேஸ்டேக்குகளையும் பதிவிட்டுள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close