[X] Close
 

பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் நாடாளுமன்ற அளவிலும் நடக்கிறது: ரேணுகா சவுத்ரியின் பகீர் பேச்சு


parliament-is-not-immune-to-casting-couch-renuka-chowdhary

  • பாரதி
  • Posted: 24 Apr, 2018 15:50 pm
  • அ+ அ-

பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் இன்று (செவ்வாய்க்கிழமை) பத்திரிகையாளர் சந்திப்பில் படவாய்ப்புக்காக நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்வது குறித்து கூறிய சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி ஆதரவு அளிக்கும் வகையில் இன்னுமொரு பகீர் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

வாய்ப்புகளுக்காக படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் அவலம் நாடாளுமன்றம் வரை நீடிப்பதாக அவர் கூறியிருக்கிறார். 
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ரேணுகா சவுத்ரி அளித்த பேட்டியில், "திரைத்துறையில் மட்டும் இந்த கொடுமை நடப்பதுபோல் பேச வேண்டாம். இது எல்லா இடங்களிலும் நடக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. நாடாளுமன்றத்தில் இத்தகைய செயல்கள் நடக்கவில்லை என நினைத்துவிடாதீர்கள். நாடாளுமன்றமாகட்டும் இல்லை இன்னும் பல்வேறு பணியிடமாகட்டும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறத்தான் செய்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவும் எழுந்து நின்று #MeToo என்று சொல்ல வேண்டிய தருணம் இது" எனக் கூறியுள்ளார். (உலகம் முழுவதும் அதிகார செல்வாக்கு மூலம் சுரண்டலுக்கு உள்ளான பெண்கள், தாங்கள் பாதிக்கப்பட்டதை அம்பலப்படுத்தும் ‘#மீடூ’ பிரச்சார இயக்கமும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.)

முன்னதாக இன்று காலை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த சரோஜ் கான், "ஆதாம் காலத்திலிருந்து இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது புதிதல்ல. பெண்களை தங்களுக்கு சாதகமாக சிலர் பயன்படுத்தத்தான் செய்வார்கள். பாலிவுட்டில் நூற்றாண்டைக் கடந்து இது நடந்துவருகிறது. திரைத்துறையில் மட்டுமேதான் அத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கூறுவது ஏற்புடையது அல்ல.
அரசு அதிகாரிகளே பாலியல் வற்புறுத்தல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார்கள். ஆனால், நாம் ஏன் சினிமா துறையையே குறை கூறிக்கொண்டிருக்கிறோம்?
பாலிவுட்டில் நடிகைகளின் ஒப்புதலுடன் தான் அத்தகைய பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. பாலிவுட்டில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அப்படியே விட்டுவிடுவதில்லையே? மாறாக அவர்களுக்கு பட வாய்ப்பு வழங்குகின்றனர்" எனத் தெரிவித்தார்.

சரோஜ் கானின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டும் வகையில் பேசியுள்ள ரேணுகா சவுத்ரி நாடாளுமன்றத்தின் மீதே பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

- ஏஎன்ஐ
 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close