[X] Close

தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் விளையாடியதாக குஜராத்தில் 10 பேர் கைது


pubg-game

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 07:11 am
  • அ+ அ-

தடை செய்யப்பட்ட பப்ஜி செல்போன் கேம் விளையாடியதாக 6 கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை குஜராத் மாநிலம் ராஜ்கோட் போலீஸார் கைது செய்துள்ளனர்.

செல்போனில் பப்ஜி என்ற வீடியோ கேம் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பிரபலமாக உள்ளது. இந்த வகை விளையாட்டுக்கு, மாணவ, மாணவிகள் அடிமையாவதால் இதைத் தடை செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில் பப்ஜி, மோமோ சேலஞ்ச் ஆகிய செல்போன் ஆன்-லைன் கேம்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ராஜ்கோட் நகர காவல் துறை ஆணையர் மனோஜ் அகர்வால் கடந்த 6-ம் தேதி உத்தரவிட்டார். இதுதொடர்பான உத்தரவு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப் பட்டது.

இந்நிலையில் ராஜ்கோட் நகரில் அந்த கேம்களை ஆன்-லைனில் விளையாடியதாக 6 கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இத்ததகவலை ராஜ்கோட் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வி.எஸ்.வன்சாரா தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “காலவாட் சாலை, ஜெகன்னாத் சவுக் பகுதியில் கேம்கள் விளை யாடிக் கொண்டிருந்த 6 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப் பட்டனர். இதேபோல காந்திகிராம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதே கேம்களை விளையாடிய தாக ராஜ்கோட் பகுதியில் நேற்று 3 பேர் கைது செய்யப்பட்டனர்” என்றார்.

கைதான 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுக்கப்பட் டனர்.

இந்த வகை கேம்கள் மாணவர் களின் படிப்பை பாதிப்பதோடு, ஒட்டுமொத்த நடவடிக்கையையும் கெடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற கேம்களை விளை யாடக்கூடாது என்று அகமதாபாத் நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.சிங் 2 நாட்களுக்கு முன்பு உத்தரவைப் பிறப்பித்தார்.

தடை செய்ய கோரிக்கை

இந்த ஆன்-லைன் விளை யாட்டை குஜராத் முழுவதும் தடை செய்யக் கோரி, மாநில அரசுக்கு, குஜராத் மாநில குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தவிர இந்த விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு 33 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு குஜராத் மாநில கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பப்ஜி நிறுவனம் விளக்கம்

பப்ஜி ஆன்-லைன் கேம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த பப்ஜி விளையாட்டு வெறும் செல்போன் விளையாட்டு மட்டுமே யாகும். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காகவும், ஆரோக்கியமான முறையில் வாழ்வை கழிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் ஆரோக்கியமான ஆன்-லைன் கேம் சிஸ்டத்தை உருவாக்கும் வகையில் இந்த விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் சில பகுதிகளில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ள்து. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி நிறுவனத் தின் நோக்கம், குறிக்கோள்களை எடுத்துக்கூறி தடையை வாபஸ் பெற முயற்சி செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close