[X] Close

ரஃபேல் மேல்முறையீடு வழக்கு; கசிந்த ஆவணங்களை ஆதாரமாக ஏற்கலாமா?- மத்திய அரசின் கோரிக்கை மீதான உத்தரவு ஒத்திவைப்பு


rafel

  • kamadenu
  • Posted: 15 Mar, 2019 10:47 am
  • அ+ அ-

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் வெளியே கசிந்த ரகசிய ஆவணங்களை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று மத்திய அரசு கோரியுள்ளது. இதுகுறித்து முதலில் முடிவு செய்யப்படும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், உத்தரவை ஒத்திவைத்துள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கடந்த டிசம்பர் 14-ம் தேதி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதனை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் அமர்வு விசாரிக்கிறது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ரஃபேல் ஒப்பந்த ரகசிய ஆவணங்கள் கசிந்ததால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது திருட்டுக்கு சமம். ஆவணங்களை ரகசியமாக நகல் எடுத்து வெளியே கசிய காரணமாக இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கசிந்த ரகசிய ஆவணங்களை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக்கூடாது” என்று கோரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், “அரசின் அனுமதியின்றி ரகசிய ஆவணங்களை வெளியிடக்கூடாது. நீதிமன்ற ஆவணங்களில் இருந்து அவற்றை நீக்க வேண்டும்" என்று கோரினார்.

அரசே கசியவிட்டது

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதாடியபோது, “ஆவணங்கள் எவ்வாறு பெறப்பட்டது என்பதுமுக்கியமில்லை. அந்த ஆவணங்கள் வழக்குக்கு தொடர்புடையதா என்பதுதான் முக்கியம். இதற்கு முன்பு ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் அரசுக்கு இணக்கமான ஊடகத்துக்கு அரசு தரப்பாலேயே கசியவிடப்பட்டது” என்று தெரிவித்தார்.

அருண் ஷோரி கூறியபோது, “ஆவணங்கள் உண்மையானவை என்று அட்டர்னி ஜெனரலே ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு நன்றி” என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, “கசிந்த ரகசிய ஆவணங்களை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை குறித்து முதலில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தது. இதுதொடர்பான உத்தரவு தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close