[X] Close

இந்திய விமானப்படை தாக்கியதில் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம் விடுதி அழிந்த படங்கள் வெளியீடு


air-force

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 11:04 am
  • அ+ அ-

இந்திய விமானப்படை தாக்கியதில் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம் விடுதி அழிந்ததை உறுதி செய்யும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்திய விமானப் படையினர், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஇஎம்) தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இறந்ததாக இந்திய அரசு தெரிவித்தது. ஆனால் ஒருவரும் இறக்கவில்லை என பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதில் பாலகோட்டில் செயல்பட்டு வந்த ஜேஇஎம் தீவிரவாத அமைப்பின் தங்கும் விடுதி கட்டடம் அழிந்ததற்கான படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த விடுதியின் பெயர் மர்க்காஸ் என்பதும் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு முன் விடுதி இருந்த இடத்தின் படமும், தாக்குதலுக்குப் பின்னர் விடுதி இருந்த இடம் சிதிலமடைந்து இருக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான கட்டிடத்தின் மேற்பகுதியில் 3 பெரிய அளவிலான துளைகள் காணப்படுகின்றன. ஒரு மீட்டர் விட்டம் கொண்ட இந்தத் துளைகள், விமானப்படையினர் தாக்கியதால் ஏற்பட்டது என்பதும் தெரிகிறது. செயற்கைகோள் உதவியுடன் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் தாக்குதல் நடத்தியதை தெளிவாக்குகின்றன.

தாக்குதல் நடைபெற்ற பிறகு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில் கட்டிடம் இடிந்திருப்பது தெரியவருகிறது. ‘கூகுள் எர்த் புரோ’ உதவியுடன் இந்தப் படங்கள் கிடைத்துள்ளன. இந்தத் தாக்குதலின்போது விடுதிக் கட்டிடம் மட்டுமல்லாமல் மேலும் 2 கட்டிடங்களும் இடிந்துள்ளன. தீவிரவாதிகள் தங்கியிருந்த கட்டிடம் மீதும், 2 விருந்தினர் மாளிகைகள் மீதும் குண்டுகளை இந்திய விமானப் படையினர் வீசியது தெரியவந்துள்ளது. செயற்கைகோள் படத்தில் மரங்களுக்கு இடையே உள்ள கட்டிடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தத் தாக்குதலுக்கு ‘ஸ்பைஸ்-2000’ வகை குண்டுகளை, இந்திய விமானப் படைகள் பயன்படுத்தியுள்ளன. இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் இந்த வகை குண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் வழிகாட்டுதலுடன் இந்த குண்டுகள் துல்லியமாக இலக்கைத் தாக்கவல்லவை என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகள் விடுதி மீது 1.5 மீட்டரிலிருந்து 3 மீட்டர் அகல இலக்குக்குள் மொத்தம் 3 குண்டுகள் வீசப்பட்டுள்ளன என்று இந்திய விமானப் படை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சரியாக இலக்கைத் தாக்கியதால் அந்தக் கட்டிடம் இடிந்துள்ளது. மற்ற குண்டுகள் அருகிலிருந்த விருந்தினர் மாளிகை மீது போடப்பட்டுள்ளன.

ஆனால், தாக்குதல் தொடர்பான படங்களை இந்திய அரசோ, சர்வதேச ஊடகங்களோ வெளியிடாததால் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு நிபுணர்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள படங்கள் தாக்குதல் நடந்ததைக் குறிக்கின்றன.

இதனிடையே மிடில்பரி இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸைச் சேர்ந்த கிழக்கு ஆசிய அணு ஆயுத பரவல் தடைத் திட்ட இயக்குநர் ஜெப்ரி லீவிஸ் கூறும்போது, “செயற்கைக்கோள் உதவியுடன் எடுக்கப்பட்டு வெளியாகியுள்ள படங்கள் மூலம், அங்கு குண்டு வெடித்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை” என்றார்.

ஆனால் இதற்கு இந்திய விமானப் படை அதிகாரிகள் கூறும்போது, “ஸ்பைஸ் 2000 வகை குண்டுகள் வெடிப்பதன் மூலம் கட்டிடங்கள் இடியவேண்டும் என்ற அவசியமில்லை. குண்டுகளில் இருந்து எழும் வெப்ப அலைகள் மூலம் அந்த அறையிலோ அல்லது கட்டிடத்திலோ இருந்தவர்கள் இறந்திருக்கமுடியும். பாலகோட் சம்பவத்தில் நாம் பார்த்தோமானால், அந்த 2 மாடிக் கட்டிடத்தை அந்த குண்டு நிச்சயம் தகர்த்திருக்கும்” என்று தெரிவித்தனர்.

சந்தேகங்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் பாலகோட் தாக்குதல் தொடர்பான படங்களை இந்திய அரசு வெளியிடும்வரை தெளிவான தகவல் கிடைக்காது என்ற கருத்து நிபுணர்களிடையே நிலவுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close