[X] Close

பதவி ஓய்வு பெற 6 மாதம் இருக்கும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியையும் டிஜிபியாக நியமிக்க பரிசீலிக்கலாம்: காலவரம்பை மாற்றி அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு


police-officers-having-minimum-of-6-months-tenure-left-should-be-considered-for-dgp-post-sc

  • போத்திராஜ்
  • Posted: 13 Mar, 2019 14:04 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி, பிடிஐ

மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபிக்களை நியமிக்கும் போது, ஓய்வு பெறுவதற்கு 6 மாதம் காலம் இருக்கும் தகுதி வாய்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவில் 2 ஆண்டுகள் வரை ஓய்வு பெறுவதற்கு காலவரம்பு இருக்கும் தகுதிவாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளைத்தான் டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவில் இன்று திருத்தம் செய்து  உத்தரவிட்டது.

அதேசமயம், மாநில அரசால் அனுப்பி வைக்கப்படும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பெயர்பட்டியல் முழுவதும் தகுதியும், சீனியாரிட்டி அடிப்படையில் இருக்க வேண்டும், அவர்களைத்தான் யுபிஎஸ்சி பரிந்துரைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவிட்டார்.

காவல்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக பிரகாஷ் சிங் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

இந்நிலையில், அந்தத் தீர்ப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி மத்திய அரசு மனு செய்தது. அந்த மனு மீது கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

அதில் சட்டம் ஒழுங்கு போலீஸ் டிஜிபிக்களாக நியமிக்கப்படுபவர்கள் தகுதி வாய்ந்த, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக்க வேண்டும்.

* மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை யூபிஎஸ்சி ஆணையத்துக்கு அனுப்பிவைத்து, அவர்கள் 3 பேரை பரிந்துரைப்பார்கள்.

* அந்த 3 அதிகாரிகளில் ஒருவரை மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கு டிஜிபிக்களாக நியமித்துக்கொள்ளலாம்.

* ஓய்வுபெறும் காலத்துக்கு குறுகிய நாட்களுக்கு முன் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து, அவர்களுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்குவதை மாநில அரசுகள் அறவே தவிர்த்துவிட வேண்டும்.

* சட்டம் ஒழுங்கு டிஜிபிக்களாக நியமிக்கப்படுபவர்கள், தங்களுடைய பதவி முடியும் காலம்வரை 2 ஆண்டுகள் வரை பணியாற்றும் தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

* தற்போது பதவியில் இருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஓய்வு பெறும் காலத்துக்கு 3 மாதங்களுக்கு முன்பே புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்கும் பணிகளை அரசு தொடங்கிவிட வேண்டும்.

*  தகுதிவாய்ந்த, அனுபவம் நிறைந்த, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை யூபிஎஸ்சி குழுவுக்கு மாநில அரசு அனுப்பி வைக்க வேண்டும்.

* அதிலிருந்து 3 பேர் பட்டியலை யூபிஎஸ்சி அனுப்பும் அதிலிருந்து ஒருவரை மாநில அரசு நியமிக்கலாம்.

* கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மாநில அரசுகள் ஏதேனும் சட்டம், உத்தரவுகள் பிறப்பித்திருந்தால் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் இருந்தது.

இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி உ.பி. மாநில முன்னாள் டிஜிபி பிரகாஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த 2018, ஜூலை 3-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், டிஜிபியாக நியமிக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி ஓய்வு பெறுவதற்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள்வரை இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை பல்வேறு மாநில அரசுகள் தவறாகப் பயன்படுத்துகின்றன. பல்வேறு மூத்த அதிகாரிகள் புறந்தள்ளி விடுகிறார்கள். இதனால், நேர்மையான, தகுதிவாய்ந்த அதிகாரிகள் கூட மாநில அரசால் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். அவர்ளுக்கு பதவி உயர்வும் மறுக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகினார். அவர் வாதிடுகையில், " 2 ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடுவார் என்ற காரணத்தாலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை காரணம் காட்டியும் திறமையான, தகுதிவாய்ந்த அதிகாரிகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. 2 ஆண்டுகளுக்கு குறைவாக பதவிக்காலம் இருக்கும் அதிகாரிகளையும் பரிசீலிக்க மாட்டோம் என்று யுபிஎஸ்சியும் கூறியுள்ளது.

உதாரணமாக, பிஹாரில் டிஜிபி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துவிட்டார். இப்போது, அவர் மீண்டும் போலீஸ் துறையில் சேர் வாய்ப்பு அளிக்கப்பட்டு டிஜிபியாக்கப்பட்டுள்ளார் " எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகினார், அவர் வாதிடுகையில் " உச்ச நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவை சில மாநில அரசுகள் தவறாக பயன்படுத்துகின்றன. முதலில் டிஜிபிக்களை தற்காலிகமாக நியமித்துவிட்டு, பின்னர் ஓய்வு பெறும் காலத்துக்கு முன் நிரந்தரமாக்கி விடுகிறார்கள். இதனால், 62வயதுவரை அவர்களால்  பதவியில் இருக்க முடிகிறது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், " மாநில போலீஸ் டிஜிபிக்களை நியமிக்கும்போது பின்பற்றப்படும் காலவரம்பு குறித்து முன்பிறப்பித்த உத்தரவைதிருத்தி 2 ஆண்டுகளில் இருந்து 6 மாதங்களாகக் குறைக்கிறோம். இதன்படி, இனிமேல் தகுதிவாய்ந்த, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறும் காலம் 6 மாதங்கள் வரை இருந்தால்கூட அவர்களையும் டிஜிபிக்களாக நியமிக்க பரிசீலிக்கலாம்.

ஆனால் மாநில அரசுகள் யுபிஎஸ்சிக்கு பரிந்துரைக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் பெயர்கள்,  தகுதி, திறமை, மூப்பு அடிப்படையில் இருக்க வேண்டும். உரிய காலத்துக்குள் இவர்களை பெயரை மாநில அரசுகள் யுபிஎஸ்சிக்கு அனுப்ப வேண்டும். அதாவது குறைந்தபட்சம் டிஜியாக இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.  அதுபோன்ற அதிகாரிகளில் ஒருவரைத்தான் யுபிஎஸ்சியும் பரிந்துரைக்க வேண்டும் " என உத்தரவிட்டார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close