[X] Close

2 கோடி வேலை, ரூ.15 லட்சம் எங்கே? - குஜராத் மண்ணில் பிரியங்கா வதேரா கேள்வி


2-crore-jobs-where-is-rs-15-lakhs

  • kamadenu
  • Posted: 13 Mar, 2019 13:31 pm
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்த ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு எங்கே? ரூ.15 லட்சம் பணம் எங்கே என்று பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணிதலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வதேராஅரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். மக்களவைத் தேர்தலின்போது தாய் சோனியாவின் ரேபரேலி, அண்ணன் ராகுலின் அமேதி தொகுதியில் மட்டும் பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைத்து வந்தார்.

இந்தப் பின்னணியில் வரும் மக்களவைத் தேர்தலையொட்டி கிழக்கு உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி வதேரா அண்மையில் நியமிக்கப்பட்டார். குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அதன்பின் காந்திநகர் மாவட்டம், அடாலஜ்ஜில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மண்ணில் அவர்தனது முதல் அரசியல் உரையைநிகழ்த்தினார்.

அவர் பேசியதாவது:கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வெளிநாட்டில் இருந்து கறுப்பு பணத்தை மீட்டு அனைவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். அந்த 2 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே? ரூ.15 லட்சம் பணம் எங்கே?அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவத்தால் நமது நாடு கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் இன்றைய நிலைமை வேதனையளிக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக நாடு முழுவதும் வெறுப்புணர்வை விதைக்கிறது. அரசமைப்பு சாசனங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்சினை, பெண்களின் பாதுகாப்பை முன்வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

உங்கள் எதிர்காலத்தை நீங்கள்தீர்மானிக்க போகிறீர்கள். யார்நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவார்கள். விவசாயிகளின் நலனுக்காக யார் உழைப்பார்கள். பெண்களின் பாதுகாப்பை யார் உறுதி செய்வார்கள். இதுதொடர்பாக கேள்வி எழுப்புங்கள். சரியான முடிவு எடுங்கள்.

வாக்குதான் உங்கள் ஆயுதம். உங்களால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம்.

இவ்வாறு அவர் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close