[X] Close

பிரச்சாரத்தை தொடங்கியது ஆம் ஆத்மி


aam-aadmi-party

டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அங்குள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர். படம்: பிடிஐ

  • kamadenu
  • Posted: 11 Mar, 2019 15:07 pm
  • அ+ அ-

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியானது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி பாஜக தலைமையகத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, தங்கள் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான அறிவிப்பை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய், டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலானது இந்தியாவின் தலைவிதியை மட்டுமல்ல, டெல்லியின் தலைவிதியையும் நிர்ணயிக்கப் போகிறது. மத்திய பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கின் காரணமாக டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஒரே தீர்வு, டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைப்பதே ஆகும். வரும் மக்களவைத் தேர்தலிலும் இந்த விவகாரத்தையே ஆம் ஆத்மி கட்சி முன்வைக்கும்.

மேலும், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களின் ஒரு பகுதியாக, டெல்லிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதன் நன்மைகள் குறித்து முதல்வர் கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கவுள்ளோம். இவ்வாறு கோபால் ராய் தெரிவித்தார்.

முன்னதாக, டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி பாஜக தலைமையகத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், இந்த விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தக் கோரி அக்கட்சியின் தலைமையகத்திலும் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் ஆணவம்: கேஜ்ரிவால் கோபம்

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. டெல்லியில் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி விருப்பம் தெரிவித்தது. இதனை காங்கிரஸ் நிராகரித்துவிட்டது.

இந்தப் பின்னணியில் டெல்லியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சிக்கு ஆணவம் அதிகம். டெல்லியில் அந்த கட்சியின் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள். ஆம் ஆத்மியால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close