[X] Close

தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப் பதிவு: மக்களவைக்கு 7 கட்டங்களாக பொதுத் தேர்தல் - ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேச சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல்; மே 23-ல் வாக்கு எண்ணிக்கை


election-date-announced

  • kamadenu
  • Posted: 11 Mar, 2019 05:45 am
  • அ+ அ-

மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மக்க ளவைத் தேர்தலுடன் 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

மக்களவை பொதுத் தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணை யர் சுனில் அரோரா டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இப்போதைய மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து 17-வது மக்களவை பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், தலைமைச் செயலாளர்கள், காவல் துறை தலைவர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத் தப்பட்டது. இதன்படி, தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 10 லட்சம் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2014 பொதுத் தேர்தலின்போது இது 9 லட்சமாக இருந்தது.

மேலும் இந்த முறை அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக் காளர்கள் தெரிந்துகொள்ளும் வசதியும் (விவிபாட்) செய்யப்பட உள்ளது.

மொத்தம் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த முறை மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும். இதன்படி, முதல்கட்டமாக 91 தொகுதிகளில் ஏப்ரல் 11, 2-ம் கட்டமாக 97 தொகுதிகளில் ஏப்ரல் 18, 3-ம் கட்டமாக 115 தொகுதிகளில் ஏப்ரல் 23, 4-ம் கட்டமாக 71 தொகுதிகளில் ஏப்ரல் 29, 5-ம் கட்டமாக 51 தொகுதிகளில் மே 6-ம் தேதி, 6-ம் கட்டமாக 59 தொகுதிகளில் மே 12, 7-ம் கட்டமாக 59 தொகுதிகளில் மே 19 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, குஜராத், கேரளா தெலங்கானா உட்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். தமிழ்நாடு, புதுச்சேரியில் 2-ம் கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.

பிஹார், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 7 கட்டமாக தேர்தல் நடைபெறும். இதுபோல கர்நாடகா, மணிப்பூர், ராஜஸ்தான் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் 2 கட்டங்களாகவும் அசாம் மற்றும் சத்தீஸ்கரில் 3 கட்டங்களாகவும் ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா மற்றும் ஒடிசாவில் 4 கட்டங்களாகவும், ஜம்மு காஷ்மீரில் 5 கட்டங்களாகவும் வாக்குப் பதிவு நடைபெறும்.

இதுபோல ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய 4 சட்டப் பேரவைகளின் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளதால், மக்களவைத் தேர்தல் நடை பெறும் நாளிலேயே இந்த சட்டப் பேரவைகளுக்கான தேர்தலும் நடை பெறும். எனினும், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு இப்போது தேர்தல் நடைபெறாது. அங்கு மக்களவைத் தேர்தல் மட்டுமே நடைபெறும்.

18 தொகுதிகளில் இடைத்தேர்தல்

மேலும் தமிழகத்தில் 18 சட்டப் பேரவை தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் இடைத் தேர்தல் நடைபெறும்.

நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்த லில் பதிவாகும் வாக்குகள் வரும் மே 23-ம் தேதி எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப் படும். இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித் தார்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் 5-ம் தேதி அறிவிக் கப்பட்டது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 12 வரை 9 கட் டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். அதேநேரம், பாஜகவின் வெற்றியைத் தடுப்பதற்காக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “ஜனநாயக திரு விழாவான பொதுத் தேர்தல் நடை பெற உள்ளது. இதில் அனைவரும் தவறாமல் பங்கேற்று தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும். குறிப்பாக, முதல்முறையாக வாக்களிக்க தகுதி பெற்றவர் கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close