[X] Close

மும்பைத் தாக்குதலுக்கு கொடுத்த பதிலடி என்ன? - காங்கிரஸ் மீது மோடி தாக்கு


modi-attacks-cong-for-handling-of-terror-incidents-post-26-11

பிரதமர் மோடி

  • பால்நிலவன்
  • Posted: 09 Mar, 2019 18:06 pm
  • அ+ அ-

பாலகோட் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கும் காங்கிரஸிக்கு பதிலடி தரும்விதமாக பேசிய மோடி மும்பைத் தாக்குதலில் அப்போதைய காங்கிரஸ் அரசு கையாண்டவிதம் குறித்து கடுமையாக தாக்கியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:

தவறவிடாதீர்

ஊழல்வாதிகளான எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக மக்களை தவறாக பயன்படுத்திவருகிறார்கள். 2014ல் பதவியேற்ற பிறகு, இன்று புதிய முறைகள், புதிய கொள்கைகளுக்காக வேலை செய்துகொண்டிருக்கிறது.

யூரியில் பயங்கரவாதத் தாக்குதல் 2016ல் நடந்தபிறகு இந்த அரசு உறுதி பூண்டது. எங்கள் அரசு, முதல் முறையாக பயங்கரவாதிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் பேசுவதெனவும் சர்ஜிகல் ஸ்டிரைக்கை நடத்தி பாடம் கற்பிக்கவேண்டும் என்று யோசித்தது.

எதுவும் செய்யாத அரசு உங்களுக்கு (மக்களுக்கு) வேண்டுமா? நாட்டின் காவலாளி தூங்குகிறாரா? (என்று ஆயிரக்கணக்கான மக்களைப் பார்த்து கேட்கிறார்)

யூரிக்குப் பிறகு சான்றுகள் கேட்கப்பட்டன. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நமது வீரர்கள் என்ன செய்யவேண்டுமோ அதை செய்துவிட்டார்கள். நமது வீரர்கள் எதிரிகளின் வீட்டுக்குள்ளேயே போய் அவர்களைத் தாக்கினர். பயங்கரவாதிகளும் மற்றும் அவர்களது பாதுகாவலர்களும் அத்தகைய நடவடிக்கைகளை எதிர்பார்க்கவில்லை.

இந்தியா ஏற்கெனவே ஒருமுறை சர்ஜிகல் ஸ்டிரைக் செய்தது. மறுபடியும் அதேபோல ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக்கத்தான் செய்வார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். அதனால் அவர்கள் எல்லை அருகிலேயே படையை நிறுத்தியிருந்தனர். ஆனால் நாம் இந்த முறை நாம் வான்வழியாக சென்றோம்.

பிப்ரவரி 24 அன்று அதிகாலைக்கு முன்னதாகவே சென்று வான்வழித் தாக்குதலை நாம் செய்தோம். அப்போது நாம் கவனமாக அவர்களை கண்காணித்துக்கொண்டிருந்தோம். அப்போது பாகிஸ்தான் அதிகாலை 5 மணி அளவில் ''எங்களை மோடி தாக்கிவிட்டார்'' என்று அலறத் தொடங்கியது...

கூலிப்படை தாக்குதல்கள், மறைமுகத் தாக்குதல்கள் மூலம் இந்தியாவைக் காயப்படுத்திவிட முடியும், அதற்கு இந்தியாவிடமிருந்து எந்தவித எதிர்வினையும் இருக்காது என அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் 2014 வரை ஆண்டவர்கள் அப்படி செய்துவிட்டு போனதுதான். அந்த ஆட்சியாளர்கள் ரிமோட் கண்ட்ரோல் அரசாங்கத்தை நடத்திவந்தனர். அவர்கள் எந்த தாக்குதலுக்கும் எந்தவித எதிர்வினையும் செய்யாமல் இருந்தார்கள். எதிரிகளும் அதற்கேற்ப தங்கள் பழக்கத்தை வளர்த்தெடுத்துள்ளனர். அதுதான் காரணம்.

மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டபோது அப்போதைய ஆட்சியாளர்கள் என்ன பதிலடி கொடுத்தார்கள்? ஆனால் அவர்கள்தான் இப்போது பாலகோட் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சில நபர்கள் பாகிஸ்தானில் கைதட்டல் வாங்குவதற்காக சர்ச்சைக்குரிய கருத்துக்களை இங்கே பேசிவருகிறார்கள். அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை நம்புவதா வேண்டாமா என மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

இன்று ஒவ்வொரு ஊழலும் மோடியினால் ஒரு பிரச்சனையாகி உள்ளது. அதனால் இந்த காவலாளியை தூக்கியெறிய நினைக்கிறார்கள். அவர்கள் வாக்குகளைப் பெற்று என்னை தூக்கியெறிய முடியும் என்று நினைத்தார்கள். ஆனால் மோடியை எதிர்க்கும் அவர்களது பிடிவாதம் தற்போது பொய்த்துவிட்டது. அதனால் நாட்டையே எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.''

இவ்வாறு பிரதமர் மோடி நொய்டா பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அதேபோல நேற்று வெள்ளிக்கிழமை காஸியாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, வான்வழித் தாக்குதல்களை விமர்சிப்பவர்களை தாக்கி பேசியதோடு, வான் வழித் தாக்குதல் 130 கோடி பேரின் நம்பிக்கை என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close